பா.ஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் மோடி பிரமாண்ட பேரணி

புதுடெல்லி: பா.ஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அவருக்கு பூக்கள் தூவி கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பா.ஜ.வின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. டெல்லி மாநகராட்சி கூட்ட அரங்கில் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடியின் ரோட் ஷோ நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பேரணி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென நேற்று நடத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் டெல்லி பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரை மோடியின் பேரணி நடைபெற்றது.  அதனால் டெல்லி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. டெல்லியில் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரையிலான பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை வரவேற்க சாலையின் இரு  புறங்களிலும் பா.ஜ தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் திரண்டிருந்தது.  அவர்கள் பிரதமர் மோடிக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு  அளித்தனர். அவர் வாகனத்தில் நின்றபடியே பயணம் செய்து, மக்களை நோக்கி  கையசைத்தபடியே சென்றார். அவர் சென்ற பாதையெல்லாம் பிரமாண்ட பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

ஒன்றிய அரசின் சாதனை விளக்க பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பல இடங்களில் ஆடல், பாடல் நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதன்பின்பு, புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட  அரங்கிற்கு சென்ற அவருக்கு பா.ஜ. தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று மாலை வரை நடைபெற உள்ள பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த ஆண்டு வர இருக்கிற 9 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பற்றிய பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   

* 9ல் ஒன்றைக்கூட இழக்கக்கூடாது: நட்டா

பா.ஜ தேசிய செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து தலைவர் ஜேபி நட்டா பேசியதாவது: இந்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றில் கூட தோல்வி அடையாமல் இருப்பதை கட்சியினர் உறுதி செய்ய வேண்டும். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இந்த 9 மாநில தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பொருளாதாரத்தில் உலகின் 5வது நாடாகவும், செல்போன் உற்பத்தியில் 2வது இடத்தையும், வாகன உற்பத்தியில் 3வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

முன்பு தினமும் 12 கிமீ மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 37 கிமீ போடப்படுகிறது. இலவச உணவுப்பொருட்கள் விநியோகம் உள்பட ஏழை, எளிய மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 150 இடங்களுக்கு மேல் வென்றது வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. இமாச்சலில் நாம் தோற்றாலும் இருகட்சிக்கும் இடையிலான ஓட்டு சதவீதம் ஒன்றுக்கும் குறைவாகவே இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: