×

வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆதரவற்ற, காயமடைந்த வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, காயமடைந்த வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க விலங்குகள் நல அமைப்புகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு அவற்றின் உரிமையாளர்களை சார்ந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட விலங்குகள் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தங்குமிடம் தேடி அலையும்போது, உடலில் காயங்கள் மற்றும் பாதுகாப்பற்ற, கெட்டுப்போன உணவை உட்கொள்ளும்போது தொற்றுநோய்கள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு உட்படுகின்றன.

இத்தகைய கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ எனும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை  பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடந்த  நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், விலங்குகள் நல அமைப்புகள் பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி - இன்டியா பிராஜக்ட் பார் அனிமல் பன்ட் நேச்சர், சென்னை - அனிமல் கேர் டிரஸ்ட், சென்னை - மெட்ராஜ் அனிமல் ரெஸ்கியு சொசைட்டி, சென்னை - பிரீத்வி அனிமல் வெல்பர் சொசைட்டி மற்றும் சென்னை  பைரவா பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் நா.எழிலன், த.வேலு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் கார்த்திக் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில் தொடங்கப்பட்டது தான் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’. இந்த விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதே இத் திட்டத்தின் நோக்கம்.

Tags : Vallalar ,Chief Minister ,M. K. Stalin , Rs 20 crore allocation for care of helpless and injured domestic animals on the occasion of 200th birth year of Vallalar: Chief Minister M K Stalin launched 'Vallalar Biodiversity Reserves' scheme
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...