×

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தமிழ்நாடு, புதுவையில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன. நீட் (பி.ஜி) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் கடந்த 13ம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர்.

வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளிமாநிலங்களில் நீட் எழுதும் நிலை உருவாகியுள்ளது. வெகு தொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும். தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும்.


Tags : Puducherry, Tamil Nadu , Additional Examination Centers in Puducherry, Tamil Nadu for NEET Exam for Post Graduate Medical Course: Anbumani Emphasis
× RELATED மக்களவை தேர்தலுக்காக மின்னணு வாக்கு...