மாமல்லபுரத்தில் பொங்கல் விழா திராவிட வாழ்வியலை, பண்பாட்டை அழிக்க சிலர் பணியாற்றுகின்றனர்: திருமாவளவன் எம்பி பேச்சு

சென்னை: மாமல்லபுரத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மல்லை கலங்கரை விளக்கு, மக்கள் சேவை மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 15ம் ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கபடி, சிலம்பம், கை பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, விசிக மாநில தொண்டரணி செயலாளர் மல்லை சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் விசிக ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, மாமல்லபுரம் நகர செயலாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில், சிறப்பாளராக விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான தொல். திருமாவளன் கலந்து கொண்டா். இங்கு, நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில், மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, ஆசான் தற்காப்பு கலை நிறுவனர் மாஸ்டர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, எம்பி திருமாவளவன் பேசுகையில், ‘‘புரட்சியாளர் அம்பேத்கரே சொல்கிறார் திராவிடர்கள் வேறு யாருமில்லை, தமிழர்கள் தான் என்று. திராவிட அரசியலை, திராவிட வாழ்வியலை, பண்பாட்டை இன்று முற்றிலும் சிதைக்க வேண்டும், பாரம்பரியத்தை, அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். நாம், நமது அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: