×

கோயம்பேட்டிற்கு வரத்து குறைவால் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கு விற்பனை

சென்னை: வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம், கடப்பா மற்றும் தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, மதுரை வத்தலக்குண்டு, வேலூர், தஞ்சாவூர், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.7க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வரத்து குறைவால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரூ.2,000க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு வாழை இலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரே நாளில் ரூ.500 அதிகரித்து, ரூ.2,500க்கு விற்கப்படுகிறது. பண்டிகை நாள் என்பதாலும், படையல் போடுவதற்கு வாழை இலை அவசியம் என்பதாலும், வேறு வழியின்றி வாங்கி செல்கிறோம்’’ என்றனர். கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி சந்திரசேகர் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை என்பதால் வாழை இலை அறுப்பதற்கு தோட்டத்திற்கு ஆட்கள் வராததால் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினசரி 12 வாகனங்களில் வரும் வாழை இலை, நேற்று குறைந்து, 7 வாகனங்களில் மட்டுமே இலை கட்டுகள் வந்ததால், ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படிப்படியாக விலை குறையும்,’’ என்றார்.

Tags : Coimbatore , A bundle of banana leaves is selling at Rs 2,500 due to lack of supply in Coimbatore
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்