ராணுவத்தில் அக்னிவீரர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ராணுவத்தில் எதிர்காலத்தில் அக்னி வீரர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படையில் வீரர்களை சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. இந்த புதிய திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 6 மாத கால ஆயுதப்படை பயிற்சி உட்பட 4 ஆண்டுகள் மட்டும் சேவையில் இருப்பார்கள். அரசின் அறிவிப்பை தொடர்ந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் அக்னி வீரர்களாக சேருவதற்கு விண்ணப்பித்தனர். இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அக்னிவீரர் குழுவினருடன் பிரதமர் மோடி நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலமாக உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: அக்னிபாத் திட்டத்தின் முன்னோடிகளாக திகழும் அக்னி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திட்டமானது பெண்களுக்கு மேலும் அதிகாரமளிக்கும். இளம் அக்னி வீரர்கள் ஆயுதபடையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவுசார்ந்ததாக மாற்றுவார்கள். தொழில்நுட்பத்தில் மேம்பட்ட வீரர்கள் நமது ஆயுத படைகளில் முக்கிய பங்காற்றுவார்கள். தற்போதுள்ள இளைய தலைமுறையினர் குறிப்பாக இந்த ஆற்றலை பெற்றுள்ளனர். வரும்காலங்களில் அக்னிவீரர்கள் ராணுவத்தில் முக்கிய பங்காற்றுவார்கள். புதிய இந்தியா புதுப்பிக்கப்பட்ட திறனுடன் நிரம்பியுள்ளது. நமது ஆயுதப்படையை வலுப்படுத்துவதுடன், தற்சார்பை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. 21ம் நூற்றாண்டில் போரிடும் விதம் மாறி வருகின்றது. நேரடி போர் அல்லாத  மற்றும் இணைய போர் சவால்கள் உள்ளன. 21ம் நூற்றாண்டில் நாட்டிற்கு தலைமை வழங்கப்போவது அக்னிவீரர்கள் தான். மேலும் முப்படைகளிலும் பெண் அக்னி வீரர்களை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related Stories: