ஆஸி. ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் நடால்: ஸ்வியாடெக் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியன் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். மெல்போர்னில் நேற்று கோலாகலமாகத் தொடங்கிய இந்த தொடரின் முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஜேக் டிரேப்பருடன் (21 வயது, 40வது ரேங்க்) மோதிய நடால் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த இளம் வீரர் டிரேப்பர் 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

எனினும், அடுத்த 2 செட்களிலும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்த நடால் 7-5, 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 41 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் ரஷ்ய நட்சத்திரம் மெட்வதேவ் 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மார்கோஸ் கிரானை எளிதாக வீழ்த்தினார். ஒயில்டு கார்டு சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய ஆஸி. வீரர் ஜான் மில்மேன் (33 வயது, 148வது ரேங்க்) 6-7 (8-10), 7-5, 6-7 (2-7), 6-2, 6-3 என 5 செட்களில் சுவிட்சர்லாந்தில் மார்க் ஹியூஸ்லரை வீழ்த்தினார். இப்போட்டி 4 மணி, 5 நிமிட நேரத்துக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா தனது முதல் சுற்றில் 7-6 (7-3), 3-6, 6-1, 6-7 (2-7), 4-6 என 5 செட்கள் கடுமையாகப் போராடி (4 மணி, 22 நிமிடம்) ஸ்லோவகியாவின் அலெக்ஸ் மால்கனிடம் தோல்வியைத் தழுவினார்.

முன்னணி வீரர்கள் ஷபோவலாவ், ஆகர் அலியஸ்ஸிமி (கனடா), கேமரான் நோரி (இங்கிலாந்து), பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா), யானிக் சின்னர் (இத்தாலி), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹர்காக்ஸ் (போலந்து) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூல் நியமியரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா தனது முதல் சுற்றில் 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் கோகோ காஃப், ஜெஸ்ஸிகா பெகுலா, மேடிசன் கீஸ், டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), மரியா சாக்கரி (கிரீஸ்), பெத்ரா குவித்தோவா, பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), எம்மா ரடுகானு (இங்கிலாந்து) ஆகியோரும் 2வது சுற்றில் நுழைந்துள்ளனர்.

Related Stories: