×

புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை; செய்முறை விளக்கம் ரத்து

புதுடெல்லி: தேர்தலில் புலம் பெயர்ந்த வாக்காளர்களுக்காக  ரிமோட் வாக்கு பதிவு இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தேசிய , மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நடைமுறைக்கு திமுக உள்ளிட்டகட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் செய்முறை விளக்கம் ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிசெய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, சொந்த ஊரில் தேர்தல் நடக்கும்போது வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரிமோட் வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தலைமை  தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்  தெரிவித்திருந்தார்.

இந்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து நேரடியாக செய்முறை விளக்கம் அளிக்கவும், கருத்துக்களை கேட்கவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அரசியல் கட்சிகளிடமிருந்து எழுத்துபூர்வமான கருத்துக்களை வரும் 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள், திமுக, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட 40 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுயேட்சை எம்பியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபலும் பங்கேற்றார்.

ஐஐடிகள் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி தொடக்கத்திலேயே இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்து விட்டது. அதே போல் திமுகவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து விட்டது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்,’ தேர்த்லில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேறு வழிகள் உள்ளன.

அப்படி இருக்கும் போது ரிமோட் ஓட்டுப்பதிவு தேவையா?. ரிமோட் ஓட்டுப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி தகுதியுள்ள புலம்பெயர்ந்த வாக்காளர்களிடையே வெவ்வேறு மாநிலங்களில் நாங்கள் எவ்வாறு பிரசாரம் செய்வோம்? ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் போது இது எப்படி சாத்தியம் ஆகும்?’ என்று கேள்வி எழுப்பினார். இதே போல் ஒவ்வொரு எதிர்கட்சிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆரம்ப கட்டத்திலேயே ரிமோட் ஓட்டுப்பதிவு முறைக்கு ஆட்சேபம் தெரிவித்தன. இதனால் நேற்று செய்முறை விளக்கம் நடைபெறவில்லை. இந்த ஆலோசனை கூட்டமும் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் கட்சிகள் கருத்துக்களை வழங்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 31ம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில்,  அந்த கால அவகாசம் தற்போது பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* போலி வாக்குகள் பதிவாக வாய்ப்பு: திமுக குற்றச்சாட்டு
ரிமோட் வாக்கு இயந்திரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்  திமுகவின் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், எம்பி.யுமான வில்சன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தொலைதூர வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் தேர்தல் அதிகாரிகளால் மட்டும் நடத்தப்படும் ஒரு தேர்தல் என்பது சட்ட ரீதியாக நியாமான முறையில் நடக்காது. அதில் போலி  வாக்குகள் பதிவாக முழுமையான வாய்ப்பு உள்ளது. அதனால், அதனை திமுக ஆதரிக்கவில்லை என தெரிவித்தோம். இதே போன்று, ஒரே நாடு-ஒரே தேர்தல் முறைக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய சட்ட ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

* காங்கிரஸ் கேள்வி
மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் பேட்டியளிக்கையில்,‘‘ ரிமோட்  வாக்கு பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பார்க்க எந்த ஒரு  எதிர்க்கட்சியும் விரும்பவில்லை. இது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படாத  வரையில் ரிமோட் வாக்கு பதிவு இயந்திரத்தை ஏற்று கொள்ள முடியாது. நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்து  ஓய்வு பெற்ற நபர்கள்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பியிருந்தனர். அதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : DMK ,Election Commission , Objection to Remote Voting System for Migrant Voters: Parties including DMK object in all-party meeting held by Election Commission; Recipe Description Cancel
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...