×

தமிழகம் முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது களைக்கட்டும் காணும் பொங்கல்; கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து  உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும்,  உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில்  இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2  ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் உற்சாகம் குறைந்திருந்தது. ஆனால் இந்தாண்டு விழா களைகட்டியது.

அதிகாலையில் எழுந்து நீராடி  புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள்  உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர். மேலும் நாடு  முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள்  பாரம்பரியம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடினர். சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பை தந்து உதவியவர்களையும்  எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய  திருவிழாவாக பொங்கல் நன்னாள் பார்க்கப்படுகிறது.

மாட்டு பொங்கல்
இந்த பண்டிகையின் 2வது நாளாக இன்று மாட்டு பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற வரிகளின்படி விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் மாடுகளை போற்றும் வகையில் இந்த மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தினத்தில் இன்று அதிகாலையில் மாடுகள் மற்றும் கன்றுகள் வசிக்கும் தொழுவம் நன்கு சுத்தம் செய்தனர். பின்னர் மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வர்ணம் பூசி விதவிதமாக அலங்கரித்து, சலங்கைகளையும் கட்டி விட்டனர்.

மேலும் மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்தனர். மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபட்டனர். பல ஊர்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மாடுகள் சார்ந்த வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தது. பல கிராமங்களில் விளையாட்டு போட்டிகள், உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி  வெகு உற்சாகமாக கொண்டாடினர்.

காணும் பொங்கல்: பொங்கல் பண்டிகையின் 3வது நாளான காணும் பொங்கல் நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலின் போது சில கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் தெளித்து விளையாடுவது, சில ஊர்களில் திருவிழா போல கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். இந்த பொங்கலை கன்னி பொங்கல் (கன்னு பொங்கல்) அல்லது கணு பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின்போது உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர்களின் ஆசி பெற்று தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.

அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெறுவார்கள்.நம் வழித்தோன்றலுக்கும் நம்முடைய பண்பாட்டை தெரிவிப்பதோடு, பெரியோர்களிடம் ஆசி பெறுதல் போன்ற நல்லபழக்கம் மற்றும் கலாச்சாரத்தை தெரிவித்தல் ஆகியவை ஆகும். பல்வேறு விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றம், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகச போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். மேலும் தங்கள் உற்றார், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடுவார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். அதனால் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் 4 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக குழந்தைகளுக்கு காவல் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 2 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது.சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் மற்றும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதேபோன்று தீவுத்திடல், வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பொருட்காட்சி போன்ற சுற்றுலா தலங்களுக்கும் சென்று மக்கள் கொண்டாட தயாராக உள்ளனர். இந்த இடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளார். சென்னையில் காணும் பொங்கல் பண்டிகையையடுத்து 15 ஆயிரம் காவலர்கள் கொண்ட சிறப்பு பாதுகாப்பு படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Pongal will be celebrated tomorrow with 15,000 police protection
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...