மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனாவின் மூன்றாம் அலை முடிந்துவிட்டது என்று நிம்மதியடைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. சமீப வாரங்களில் பரவலின் R Value வேகமும் அதிகரித்திருக்கிறது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. டெல்லி, மஹராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கொரோனா பரவலின் ஆர்.வேல்யூ அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஒமிக்ரான் வகை உருமாற்றமே இந்த பரவலுக்கு காரணமாக உள்ளது. கோவிட் தொற்று பரவத் தொடங்கியது முதலே பல்வேறு வடிவங்களில் கொரோனா உருமாறி வருகிறது. ஒமிக்ரான் பிஏ1.1 மற்றும் பிஏ1.2 என உருமாறிய நிலையில் தற்போது பிஏ2 மற்றும் பிஏ2.1 என சமீபத்தில் உருமாறி உள்ளது. இதேபோல் உருமாறிய XE என்கிற வைரஸ் டெல்லி, மும்பைகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

பிஏ2.1 ஸ்டெல்த் ஒமிக்ரான் வலுவானது என்பதால், மூன்றாம் அலைக்குக் காரணமான முந்தைய ஒமிக்ரானை விடவும், இதன் பெருகும் திறன் அதிகமாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதுடன், தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலே, இதன் தீவிரத்தையும், பரவலையும் கணிசமாகக் குறைக்கலாம்.

முந்தைய ஒமிக்ரானை விடவும் இதன் பெருகும் விகிதம் அதிகமாக உள்ளது. உடலில் இதன் ஆற்றலும், பெருகும் திறனும் கூடுதல் என்பது கவனத்திற்குரியதாக உள்ளது. முந்தைய கோவிட்-இல் உள்ள அதே நோய்க்குறிகளான இருமல், சளி, மூச்சுத்திணறல், மூட்டுவலி, சோர்வு, மூச்சு விட சிரமப்படுதல், மேல் சுவாசக் குழாய்த்தொற்று, தலைவலி, சுவை மற்றும் வாசனை இழத்தல் போன்றவை இதற்கும் பொருந்தும்.

சிலருக்கு இந்த வைரஸ் லேசான அல்லது மிதமான நோய்க்குறிகளை உண்டாக்கி இரு வாரங்களில் குணமாகிவிடும். மற்றவர்களுக்கு இந்த வைரஸ் நிமோனியா உள்ளிட்ட கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தையும் விளைவிக்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெரும்பான்மையோருக்கு எந்த நோய்க்குறிகளும் இருக்காது அல்லது லேசான நோய்க்குறிகள் வெளிப்படும். இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருக்கும் நிலை அல்லது இறத்தல் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தி.

இந்தியாவில் நான்காம் அலை பற்றிய அச்சமும் இதனால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வைரஸ் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி ஸ்டெல்த் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகம்.இப்போது தொடங்கி ஒரே மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா உச்சத்தைத் தொடலாம்.

அமெரிக்கா உச்சம் தொட்ட நாள் தொடங்கி சுமாராக அடுத்த இரு மாதங்களில் இந்தியா உச்சத்தை எட்டலாம். இந்த கணிப்புகளின்படி ஒருவேளை இந்தியாவில் பிஏ2 வைரஸ் அதிகமாகப் பரவினாலும் இந்திய மருத்துவத்துறை சிறப்பாகக் கையாள்வதுடன், உறுதியாகச் சமாளிக்கும். நாம் புரிந்துகொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும் ஒன்றுதான்... கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத செயல்.வரும் நாட்கள் அல்லது மாதங்களில் குறைந்தபட்சம் 10 - 15 வைரஸ்களாக அது உருமாற்றம் பெறக்கூடும்.எனவே, நம் பாதுகாப்புக்காக கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, இரண்டு டோஸ் தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டிப்பாகத் தொடர்ந்தாலே போதும். எந்த அலையையும் எதிர்கொள்ளலாம்.

தொகுப்பு - ஜி.ஸ்ரீவித்யா

Related Stories: