கொலீஜியம் குழுவில் ஒன்றிய அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு சட்ட அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியங்களில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். நீதிபதிகள் நியமன விசயத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க அரசியல் சாசன நடைமுறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் தகவல்தொடர்புக்கு இந்த நடைமுறையை பின்பற்றுவது அவசியம். கொலிஜியம் முறை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரூமா பாலின் கருத்துகளும் ஏற்கக் கூடியதாக உள்ளது’ என்று கூறியுள்ளார். முன்னதாக கொலீஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை குறித்து பகிரங்கமாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

ராஜ்யசபா எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இதுகுறித்து கூறுகையில், ‘நீதித்துறையை கையகப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள விரும்புகிறது. அரசின் பரிந்துரையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் ஒன்றிய அரசு ஏற்கனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

நீதித்துறை மட்டுமே கடைசி கோட்டையாக இருந்தது. தற்போது அதிலும் கை வைத்துள்ளது. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு சென்றால், அவர்களின் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்புகளை கொடுப்பார்கள்’ என்றார்.

Related Stories: