நகைகள், கைக்கடிகாரங்கள், ஐபோன்கள் உட்பட விமான பயணிகளின் உடைமையை திருடிய 8 ஊழியர்கள் கைது: டெல்லி ஐஜிஐ போலீஸ் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் விமான பயணிகளின்  நகைகள், கைக்கடிகாரங்கள், ஐபோன்கள் உட்பட உடைமைகளை திருடிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைநகர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (ஐஜிஐ) போலீஸ் டிசிபி ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘விமான நிலையத்தின் பேக்கேஜ் கவுண்டர்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர், பயணிகளின் உடைமைகளை திருடுவதாக புகார் எழுந்தது. அதையடுத்து அவர்களை கண்காணிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பயணிகளுக்கு சொந்தமான ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், கைக்கடிகாரங்கள், ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய சம்பவத்தில் 8 ஊழியர்களை அடையாளம் கண்டுபிடித்தோம். தற்போது அவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த ஆண்டு பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் பேக்கேஜ் கவுண்டர்களில் திருடுவதும், பின்னர் திருடப்பட்ட பொருட்களை விமான நிலையத்திற்குள் மறைப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, திருடப்பட்ட பொருட்களை உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்’ என்றார்.

Related Stories: