×

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று 1,187 சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று 1,187 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. சென்னை மற்றம் சுற்றுப் புறங்களில் வசிக்கும் மக்கள் அரசு பஸ்களில் இந்த முறை அதிகளவில் பயணம் செய்தனர். 5 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். அரசு பஸ்கள் மட்டுமின்றி வழக்கமான ரெயில், சிறப்பு ரெயில்கள், ஆம்னி பஸ்களிலும் சுமார் 5 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர்.

4 நாட்களில் 10 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகை நேற்று முடிந்து சிலர் இன்று சென்னை திரும்புகிறார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தவிர தனியார் நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள் இன்று சொந்த ஊர்களில் இருந்து புறப்படுகிறார்கள். வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் 18-ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூர் உள்பட பல நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று மாலையில் இருந்து இரவு வரை சிறப்பு பஸ்கள் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றன. இதேபோல சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 1525 சிறப்பு பஸ்கள் இன்று விடப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும், பிற நகரங்களுக்கும் இதுவரையில் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பஸ்கள் சென்னை திரும்புவதற்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நாளை அதிகாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம், பெருங்களத்தூர், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலைய பகுதிகளில் நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்படுகிறார்கள். நாளை 17-ந்தேதி வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 1941 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. புதன்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதால் நாளை இரவுக்குள் வெளியூர் சென்றவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Pongal ,Chennai ,Special Buses Movement , 1,187 special buses to return to Chennai for Pongal festival: Traffic Information
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா