×

2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.!

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். தமிழுக்காகவும், இலக்கியத்திற்காகவும், சமூகத்திற்காகவும் சேவை செய்து பெரும் தொண்டாற்றிய நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களின் பெயர்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, திருவள்ளுவர், பெருந்தலைவர் காமராசர், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட 9 பெரும் தலைவர்களின் பெயர்களில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த விருது வழங்கும் விழா தொடங்கியது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர், அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியன் கலந்துகொண்டனர். 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமி அவர்களுக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு. உபயதுல்லா அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா திரு. வல்லவன் அவர்களுக்கும்,தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது எழுத்தாளர் நாமக்கல் திரு.பொ.வேல்சாமி அவர்களுக்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திராவிடர் கழக துணைத் தலைவர்கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் விருது திரு.எஸ்.வி. ராஜதுரை மற்றும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும் வள்ளலார் பல்லுயிர்க் காப்பகம் எனும் புதிய திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Tags : Nadu ,Chief Minister of State ,G.K. stalin , Thiruvalluvar Award 2023 and Tamil Nadu Government Awards: Chief Minister M.K.Stalin presented!
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...