×

மாநிலங்கள் அனைத்தும் இவ்விஷயத்தில் ஒன்றுபடாமல் பிடிவாதம்: இழுத்தடிக்கும் கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டம்.! மக்கள் பாதிக்கப்படுவதாக ஒடிசா, தெலங்கானா எதிர்ப்பு

வேலூர்: தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்தில் கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டம் சில மாநிலங்களின் பிடிவாதத்தால் நிதி ஒதுக்கீட்டை பெற முடியாமல் சிக்கலை சந்தித்து வருவதாக தென்மாநில விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய தேசம் ஒருபுறம் வறட்சியும், மறுபுறம் வெள்ளமும் என்ற சமநிலையற்ற இயற்கை தன்மையும் கொண்டது. இதனை சீராக்கி இயற்கை வளத்தை சமமாக பன்முகப்படுத்தி பயன்படுத்தும் நோக்கமில்லாததால் தேசம் பல இழப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் இந்திய நாட்டில் மாநிலங்கள் இடையே கருத்தொற்றுமை இல்லாததாலும், தலைவர்களிடையே உள்ள பிராந்திய உணர்வாலும், நாட்டின் எல்லையில்லா இயற்கை வளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் ஆண்டுக்கு ₹15 ஆயிரம் கோடி முதல் ₹20 ஆயிரம் கோடி வரை பொருளாதார இழப்பை நாடு சந்தித்து வருகிறது. அதற்காகவே தேசிய நதிகள் குறிப்பாக கங்கையை காவிரியுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக எழுந்து வருகிறது. இந்த நூற்றாண்டில் பெரிய தலைவலியாக இந்தியாவுக்கு இருக்கப்போவது தண்ணீர் பிரச்னைதான்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண பலரும் வலியுறுத்தி வந்த தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்துக்கான வெளிப்படையான யோசனையை மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், மத்திய அரசு பணியில் இருந்த பொறியாளர் கே.எல்.ராவ் கடந்த 1972ம் ஆண்டு வெளியிட்டார். அவரது யோசனைப்படி கங்கை- காவிரி இடையே இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட்டால், பீகார் மாநிலம் பாட்னா அருகே வெள்ளமாக பாயும் 60 ஆயிரம் கியூசெக்ஸ் கங்கை நீர் தென்மாநிலங்களுக்கு திருப்பிவிடப்படும். இது ஒட்டுமொத்த தென்மாநிலங்களின் 150 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அந்த அறிக்கையில் கே.எல்.ராவ் கூறினார்.இவரது யோசனையை ஆய்வு செய்த வல்லுனர் குழு இத்திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், விந்தியமலைகளுக்கு அப்பால் தக்காண பீடபூமிக்கு தண்ணீரை கொண்டு செல்ல அதிக மின்விசை தேவைப்படும் என்றும், இதற்கு அதிக செலவு பிடிக்கும் என்றும் கூறி நிராகரித்தது. ஆனால், கே.எல்.ராவ் யோசனைக்கு இணையாக ‘கேர்லேண்ட் கெனால்ஸ்’ என்ற திட்டத்தை கேப்டன் டஸ்டர் என்பவர் கடந்த 97ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். இவரது பரிந்துரையில், இமயமலைத்தொடரில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில், கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கேப்டன் டஸ்டர் கூறிய பரிந்துரையை ஆய்வு செய்ய தேசிய அளவிலான ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், இத்திட்டமும் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ₹5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.அதற்கு பதில், நீர்வளங்களை மேம்படுத்துவதற்காக, ‘இமாலய ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்றும், இரண்டாவது ‘தீபகற்ப ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்று இரண்டு தொகுதிகளாக கொண்ட ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்காக தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் என்னும் பெயரில் ஒரு தன்னாட்சி அமைப்பு 1982ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாணையம் முதலில் தீபகற்ப ஆறுகளுக்கான திட்டத்தை வகுத்தது. இது, மகாநதி, நர்மதா, கோதாவரி ஆகிய ஆறுகளை தெற்கிலுள்ள காவிரி, வைப்பாறு, தாமிரபரணி ஆறுகளுடன் இணைப்புக்கால்வாய்கள் மூலம் இணைக்க வகை செய்தது. அதன்படி மகாநதியில் இருந்து கடலில் சேரும் 8 ஆயிரம் டிஎம்சி நீரை கோதாவரிக்கு திருப்பலாம் என்று தனது ஆலோசனையில் மத்திய நீர்வள மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. இதற்காக ஹிராகுட் அணையின் அருகே மணிபந்திராவில் மற்றொரு அணை கட்டப்பட வேண்டும் என்று கூறியது. அங்கிருந்து தவுலேஸ்வரம் அணைக்கு நீரை கொண்டுவர எந்த மின்விசையும் தேவைப்படாது.

மேலும் தவுலேஸ்வரம் அணையின் மேற்பகுதியில், கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள போலாவரம் அணையின் அருகில் மற்றொரு அணை கட்டி, 21,550 டிஎம்சி நீரை கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லலாம். இதன்படி, கோதாவரியிலிருந்து உபரிநீரை கிருஷ்ணா நதிக்கு திருப்பி விடுவதற்கான மூன்று இணைப்புகள் அமைக்க திட்டம் வகை செய்கிறது. முதலாவதாக, பிரகாசம் அணை அருகே 1,200 டிஎம்சி நீரை கொண்டு சேர்ப்பதற்காக, போலவரம்-விஜயவாடா இணைப்பு கால்வாய், 4,370 டிஎம்சி நீரை கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட வேண்டும். 14.000 டிஎம்சி நீரை நாகர்ஜூனா சாகர் அணைக்கு கொண்டு செல்ல, இச்சம்பள்ளி - நாகார்ஜூனா சாகர் இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட வேண்டும். பெண்ணாற்றின் குறுக்கே உள்ள சோமசீலா அணைக்கு 12,000 டிஎம்சி நீரை மாற்றலாம்.அதில் 9,800 டிஎம்சி நீரை காவிரிக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் இப்போதைக்கு ஒன்றிய அரசு கோதாவரி- காவிரி இணைப்பையே பிரதானப்படுத்துகிறது. மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் கோதாவரி, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களை வளம்பெற செய்துவிட்டு வங்கக்கடலில் சேருகிறது. ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இவ்வாறு வீணாகும் 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீரில் 900 டிஎம்சி தண்ணீரை தெலங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்திருக்கிறது.

அதன்படி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில எல்லையில் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டப்படுகிறது. அங்கிருந்து தெலங்கானா மாநிலம், காலேஸ்வரம் அணைக்கு வரும் கோதாவரி நீர் அங்கிருந்து போலாவரம் அணைக்கும் அங்கிருந்து நாகார்ஜூனா சாகர் அணைக்கும் கொண்டு செல்லப்பட்டு கிருஷ்ணாவில் விடப்படுகிறது. அங்கிருந்து சைலம் சோமசீலா அணைக்கு வரும் கோதாவரி நீர் வடபெண்ணைக்கு வருகிறது. அங்கிருந்து ஸ்டீல் பைப் லைன் மூலம் தென்பெண்ணையில் வந்து சேருகிறது. அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்பட்டு காவிரியில் இணைக்கப்படுகிறது.ஏற்கனவே கோதாவரி- கிருஷ்ணா இணைப்புத்திட்டத்துக்காக மேற்கு கோதாவரி மாவட்டம் போலாவரத்தில் பெரிய அணை கட்டப்படுகிறது. இதன் மூலம் கோதாவரி நீரை நாகார்ஜூனா சாகர் அணைக்கு திருப்புவதே போலாவரம் திட்டத்தின் பிரதான நோக்கம். இத்திட்டத்துக்காக தேவைப்படும் 1.68 லட்சம் ஏக்கர் நிலத்தில் 1.19 லட்சம் நிலத்தை கையகப்படுத்தி பணியை ேவகப்படுத்தி திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்துக்காக தேவைப்படும் ₹67 ஆயிரம் கோடியில் ₹14 ஆயிரம் கோடியை அம்மாநில அரசு செலவிட்டுள்ளது. இத்திட்டத்தில் 80 டிஎம்சி தண்ணீர் போலாவரம் வலதுகால்வாய் மூலம் கிருஷ்ணா நதிக்கு திருப்பி விடப்படும்.

ஆனால், இத்திட்டத்துக்கு பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஒடிசா, தெலங்கானா மாநிலங்கள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சிக்கல்களை களைந்து ஒடிசா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் சம்மதத்துடன் போலாவரம் திட்டத்தை முடித்து, அதன்வழியாக கோதாவரி நீரில் 100 டிஎம்சி நீரை காவிரிக்கு கொண்டு வரும் திட்டத்தை, ₹60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஒன்றிய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டத்தின் தொடர்ச்சியாக காவிரி- வைகை- குண்டாறு நதிகளும் இணைக்கப்பட உள்ளன.ஆனால் கோதாவரி- காவிரி இணைப்பு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ள கர்நாடகம், காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நதிநீர் இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை கோதாவரி- காவிரி இணைப்பு போன்று நாடு முழுவதும் பிரதானமாக 9 திட்டங்களை செயல்படுத்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. திட்டச் செலவில் ஒன்றிய அரசு 90 சதவீதத்தை ஏற்றுகொள்கிறது.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்காக இதுவரை டெல்லியில் 5 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறை செயலர் சந்தீப்சக்சேனா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு திட்டத்தை விரைவுப்படுத்த மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை கேட்டுக் கொண்டனர். அப்போது மாநில நதிகள் இணைப்பில் கால்வாய்களின் உயரத்தை அதிகப்படுத்தவும் கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மனுவாக கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கோதாவரி- காவிரி இணைப்பில் தொடர்புடைய மாநிலங்கள் அனைத்தும் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டால் இத்திட்டத்துக்கான நிதி விடுவிக்கப்படும் என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, நிதி ஒதுக்கிட்டை பெறுவதற்கு தெலங்கானாவும், ஒடிசா மாநிலங்கள் தங்கள் பிடிவாதங்களை கைவிட வேண்டும். தீபகற்ப நதிகளை இணைப்பதற்கான முன்னெடுப்புகளை விரைவுப்படுத்த வேண்டும் என்பதே தென்னக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Odisha, ,Telangana , All the states are not united on this issue and are stubborn: Godavari-Kaveri link project is dragging! Odisha, Telangana protests that people are suffering
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து