உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது.! மிரட்ட காத்திருக்கும் காளைகள்

மதுரை: பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு திருவிழா தை முதல் நாளான மதுரை அவனியாபுரத்தில் இன்று துவங்கியது.

தொடர்ந்து நாளை பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடக்கிறது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே உடன்பாடு ஏற்படாததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை இம்முறையும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி சிறப்பு நிதியில் இருந்து ரூ.17.63 லட்சம் ஒதுக்கி விழா மேடை, வாடிவாசல், பார்வையாளர் மேடை மற்றும் தடுப்பு வேலிகள், காளைகளுக்கான கால்நடை பராமரிப்புத்துறை பரிசோதனை  மையம் ஆகியவற்றின் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது.

சுகாதாரத்துறை சார்பில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 3 பிரிவுகளாக உள்ளனர், இவர்கள் வீரர்கள், பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தயாராக உள்ளனர். இதேபோல், காளைகள் காயம்பட்டால் சிகிச்சையளிக்க  30 கால்நடை மருத்துவர்கள், 63 கால்நடை உதவி ஆய்வாளர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் வழியில் அவனியாபுரத்தில் 7 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெறும். அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் மற்றும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த பரிசுகள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட உள்ளது.

Related Stories: