முன்னாள் ராணுவ வீரர்கள் தினம் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ராணுவ தளபதி எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் என்று அறிவித்தார். முப்படைகளிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவை செய்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, 7வது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர்.சவுதாரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் மானேசா மையத்தில் முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பேசிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ‘‘இன்று நமது ஆயுதப் படைகள் உலகின் மிகச்சிறந்த மற்றும் உயர் தொழில்முறை படைகளாக கருதப்படுகின்றன. இதற்கு, முன்னாள் வீரர்களின் தியாகம், அவர்களின் தைரியம், கடின உழைப்பே காரணமாகும். முன்னாள் வீரர்கள் தந்த ஊக்கத்துடன் இன்று முப்படைகளும் இணைந்து தேசத்திற்கு எதிரான எந்தவொரு சவாலையும் வலுவுடன் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது’’ என்றார். இதே போல், முன்னாள் ஆயுதபடை வீரர்கள் தினம் சென்னை, ஜுஹன்ஜுனு, ஜலந்தர், பனகர், டெல்லி, டேராடூன், சண்டிகர், புவனேஸ்வர் மற்றும் மும்பை ஆகிய 9 நகரங்களில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: