இன்று கடைசி ஒருநாள் போட்டி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா? ஆறுதல் வெற்றிக்கு இலங்கை முனைப்பு

திருவனந்தபுரம்: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 67 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா, அடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

இந்தியா 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், சம்பிரதாயமான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்ற இந்திய அணி வரிந்துகட்டுகிறது. அதே சமயம், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஆறுதல் வெற்றியுடன் இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் முனைப்புடன் களமிறங்குவதால், இன்றைய ஆட்டம் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

* இது திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில்  நடைபெறும் 5வது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.

* 2017ம் ஆண்டு இந்த மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா தோற்கடித்தது.

* 2018ல் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா தோற்கடித்தது. 2019ல் நடந்த டி20 போட்டியில் மேற்கிந்திய தீவு அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.

* கடைசியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா தோற்கடித்தது.

Related Stories: