×

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருவனந்தபுரம்: லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகரஜோதி தெரிந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலையிலேயே ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 3.30 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 11.30 மணி வரை நடைபெற்றது.

தொடர்ந்து கலச பூஜை, களபாபிஷேகம் ஆகியவற்றுக்குப் பின்னர் 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதற்கிடையே பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண ஊர்வலம் மாலை 5   மணியளவில் சரங்குத்தியை அடைந்தது. சரங்குத்தியில் ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. பின் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில்   அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து 6.47 மணியளவில் முதல் முறையாக பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரிந்தது. அடுத்து மீண்டும் இரண்டு முறை ஜோதியை தரிசித்ததும் சபரிமலை, பாண்டித்தாவளம், புல்மேடு உட்பட பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். இதன்பின் இரவு 8.45 மணியளவில் பிரசித்தி பெற்ற மகரசங்கரம பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்பட்ட நெய் மூலம் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

* எருமேலியில் தமிழக, கர்நாடக பக்தர்கள் போராட்டம்
சபரிமலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நேற்று காலை முதல் எருமேலியில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் சபரிமலை செல்ல போலீசார் தடை விதித்தனர். ஆனால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களுக்கு வாகனங்களில் சபரிமலை செல்ல வேண்டும் என்று கூறி எருமேலியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் தங்களை வாகனங்களில் சபரிமலை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி எருமேலியில் சாலை மறியலில்  ஈடுபட்டனர். எஸ்பி கார்த்திக் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலையில் தரிசனம் முடிந்து பக்தர்கள் திரும்பிய பின்னர் வாகனங்களை அனுமதிப்பதாக அவர்  கூறியதை தொடர்ந்து பக்தர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.


Tags : Makarajyothi ,Sabarimala , Makarajyothi darshan at Sabarimala: Lakhs of devotees throng
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...