பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 27ம் தேதி முதல் நடைபயணம்: நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி அறிவிப்பு

சென்னை: பாஜவில் பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்தும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வரும் 27ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி தந்தார். அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் உச்சக்கட்டமாக நடிகை காயத்ரி ரகுராம் ‘ பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு காயத்ரி ரகுராம் பாஜவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்த நிலையில் திடீரென கடந்த 3ம் தேதி பாஜவில் உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் பாஜவில் இருந்து விலகுவதாக அதிரடியாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார். அதன் பிறகு காயத்ரி ரகுராம் சற்று அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென தனது டிவிட்டர் பதிவில் ஒரு பரபரப்பான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதாவது டிவிட்டர் பதிவில், ‘பாஜ பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும், ஜனவரி 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன்.

தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராம் திடீரென பாஜ அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் நடைபயணம் மேற்கொள்வேன் என்று அறிவித்துள்ளது, பாஜவுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி ரகுராம் நடைபயணம் மேற்கொண்டால் அது பாஜவுக்கு பெரும் பின்னடைவதாக கருதப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: