உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் திருநாள் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம்: உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாகம்; முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உழவர் திருநாளாம் பொங்கல் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, புத்தாடைகள், பொங்கலிட தேவையான பொருட்கள் வாங்க குவிந்ததால் பஜார்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை விழா, போகியுடன் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று காலை போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் காப்பு கட்டி விளக்கேற்றி மக்கள் வழிபட்டனர். பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புதுநெல் வந்திருக்கும். ஆதலால் அதை குத்தி அதில் தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது.

எனவே, நாம் பல்வேறு விழாக்கள், பண்டிகைகளை கொண்டாடினாலும், தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக விளங்குவது தைப் பொங்கல் பண்டிகை தான். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் உழவர் திருவிழாவாக இதனை கொண்டாடுகின்றனர். விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் கதிரவன், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகள், உழவுப் பொருட்களை இந்த நாளில் தெய்வமாக கருதி வணங்கி வழிபாடு நடத்துகின்றனர் விவசாயிகள். எனவே, தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை இன்று காலை உலக தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழல் நிலவியது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முதல் வரும் 17ம்தேதி என 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதாவது, நேற்று போகி, இன்று தைப்பொங்கல், 16ம்தேதி மாட்டு பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என 4 நாட்கள் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் கடந்த 12ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல தொடங்கினர். இதனால், ரயில் நிலையம், பேருந்து நிலையம் விமான நிலையம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் 5 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகள் மூலம் ஒரு லட்சம் பேரும், ரயில்கள் மூலம் இரண்டரை லட்சம் பேரும், சொந்த வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலம் ஒன்றரை லட்சம் என மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புதுத் துணிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் பூக்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருந்தது. தைத் திருநாளான பொங்கல் மற்றும் அதன் முன்னரும் பின்னரும் வரும் மங்கலமான நாட்களில், பூஜைக்காகவும், அலங்காரத்திற்காகவும் பூக்கள் அதிகம் தேவைப்படுகிறது.

அதிலும் மார்கழி மாதம் முழுவதும் பூக்களுக்கு இருக்கும் தேவை, தையில் இரட்டிப்பாகிறது. இந்நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலையைக் கேட்டால், அதிர்ச்சியளிப்பதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். அதேபோன்று பொங்கலிடுவதற்கான அனைத்து விதமான பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பஜார்களில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் நேற்று முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.

ஒவ்வொறு பகுதிகளில் உள்ள சிறிய முதல் பெரிய மார்கெட் வரை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், தொடர்ந்து காணும் பொங்கல் என்று மக்கள் விமர்சயைாக கொண்டாடுவர்.இதை கொண்டாட பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருந்தது.  இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் மக்கள் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர்.

* ஒரு லட்சம் பேர் கூடுவார்கள்

சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரையில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை உயரதிகாரிகள் வழங்கி உள்ளனர். கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: