×

கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் சீனாவில் 90 கோடி பேருக்கு கொரோனா?.. திறந்தவெளியில் சடலங்கள் எரிப்பு

புதுடெல்லி: சீனாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இதுவரை 90 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும் இறந்தவர்களின் சடலம் திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையே சீனாவில் வழக்கமாக கொண்டாடப்படும் சந்திர புத்தாண்டை முன்னிட்டு, தினமும் கோடிக்கணக்கான மக்கள் தடையின்றி தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்கிறார்கள்; புத்தாண்டு கொண்டாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். சமீபத்திய தரவுகளின்படி சீனாவில் 90 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில், ஒரு கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், மீண்டும் அவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிகளின் ஆற்றல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீன மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திறந்தவெளியில் சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. 141 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட சீனாவில் 90 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை.

Tags : Corona ,China , Uncontrollable spread of Corona, 90 crore people in China Corona?, corpses are burned in the open
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...