×

ஓசூரில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை அடித்துக்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (30), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் 2 மகன்கள்.  கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணியின்போது தவறி விழுந்ததில் சக்தி உயிரிழந்தார். இதனால் தனது மூத்த மகனை, ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்த்த நந்தினி, இளைய மகன் ஜெகநாதனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் குழந்தை ஜெகநாதன் தலையில் பலத்த காயத்துடன் ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். இதனிடையே, கடந்த மாதம் 25ம் தேதி காலை, குழந்தை திடீரென உயிரிழந்தான். இதையடுத்து, குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது. இதற்கிடையே, தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாய் வள்ளி, அட்கோ போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் நந்தினியை அழைத்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், தனது கள்ளக்காதலன், தனது குழந்தையை கொன்றதாக நந்தினி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரது கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ரஞ்சித்குமார் அடிக்கடி ஆலூர் சென்று, கள்ளக்காதலி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் 6ம் தேதி, நந்தினியுடன் உல்லாசமாக இருந்த போது, குழந்தை ஜெகநாதன் அழுததால், உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததாக கருதி ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து, குழந்தையின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே குழந்தை இறந்துள்ளான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நந்தினி மற்றும் ரஞ்சித்குமார், குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல், கோகுல்நகர் சுடுகாட்டில் புதைத்து விட்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இருவரும் மாட்டிக் கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Tags : Osur , Disturbing entertainment, 3-year-old child, beaten to death
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்