×

திருச்சி அருகே 4 தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் குடும்பம்

*நாட்டு மாடுகளின் இனத்தை பாதுகாப்பதே நோக்கம்

திருச்சி : தமிழர்களின் வாழ்வியலில் மாடு வளர்ப்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. குடும்பத்தில் ஒருத்தராக மாடுகளை பாவித்து ஏராளமோனார் இன்றும் பராமரித்து வளர்த்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு என்றே காளைகளை பலரும் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருச்சி அருகே 4 தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகளை பாரம்பரியமாக வளர்ந்து வரும் ஒரு குடும்பத்தினர். காளைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதன் உணவுமுறைகள், பயிற்சிகள் என அனைத்தையும் கற்று காளைகளை வளர்த்து வருகிறார்கள்.

திருச்சிக்கு அருகே மாத்தூர் அடுத்த மங்கதேவன்பட்டி கிராமத்தில் கருப்பையா(45), கணேஷ்(49) சகோதரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், வைத்து பராமரித்து வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது; எங்கள் மூப்பாட்டனார் வெண்ணம்பிள்ளை காலத்திற்கு முன்பிலிருந்து நாங்கள் இந்த மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். அவருக்கு பிறகு எங்கள் தாத்தா குமரபிள்ளை, அடுத்து எங்க அப்பா தங்கராஜ் , தற்போது நாங்கள் மாடு வளர்த்து வருகிறோம்.

எங்களுடைய தொழில் என்றால் ஆலைகளில் ஏற்படும் அதிகமான ஒலியை கட்டுப்படுத்தும் இயந்திரங்களை தயார் செய்வது தான், மற்ற நேரங்களில் இந்த மாடுகளுடன் தான் எங்களுடைய வாழ்க்கை. பெரும்பாலும் நாங்கள் இதைவிட்டு விட்டு எங்கேயும் செல்வதில்லை. தினமும் இவற்றை நாங்கள் கவனித்து கொண்டே இருக்க வேண்டும். அதிலும் இங்குள்ள ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும், ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று அங்குள்ள காட்டு மாடுகளை வாங்கி வந்து வளர்க்கிறோம். எங்களிடம் கண்ணாவரம் காளை மற்றும் பசு, கண்ணாவரம் கிராஸ், தேனி மலைமாடு, புலிகுளத்து மாடு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் உள்ள நாட்டுமாடு, குட்டை ரகம், தெக்கத்தி (சிவகங்கை) ரகம் எங்களிடம் உள்ளது.

 நாங்கள் இன்றுவரை இந்த ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருவதற்கு ஒரே ஒரு காரணம், எங்கள் வீட்டில் உள்ள எல்லா மாடுகளும் நாட்டு மாடுகள் தான், அதேபோல் நாங்கள் இனபெருக்கத்திற்கு ஊசிகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இயற்கை முறையில் எங்களுடைய காளைகளை கொண்டே நாங்கள் இனப்பெருக்கம் செய்து, அதை நாங்களே வளர்த்து வருகிறோம். நாட்டு மாடுகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

அவற்றை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது தான் எங்கள் இலக்கு.பொதுவாக மாடுகளை ஒரு 3 மாத காலம் அவற்றை கட்டிப்போட்டு நம்முடைய ஊருக்கு ஏற்றாற்போல் பழக்கப்படுத்திவிட்டு தான், கொட்டகையில் ஏற்றுவோம். புதிய மாடுகள் முதலில் மனிதர்களை நம்பாது. அதிலும் இன்னும் ஒருசில மாடுகள் நன்றாக பழகினாலும், எப்போதும் சந்தேகத்தோடே நம்மை அணுகும்.

இருப்பினும் நாங்கள் அவற்றை மிகவும் கவனமாக பார்ப்பதுடன் அவர்கள் எங்கள் வீட்டு பிள்ளைகள் தான், எந்த நிகழ்ச்சியாக, பண்டிகையாக இருந்தாலும் அவர்களுக்கு தான் முதல் மரியாதை. அதேபோல் எங்களிடம் அன்பு, அழகன், பெரியகருப்பு, சின்னகருப்பு என 4 காளைகள் உள்ளது. அவை கோவிலுக்கு என்று வைத்துள்ளோம். கோவில்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த 4 காளைகள் அவிழ்க்கப்பட்ட பிறகு தான், மற்ற காளைகள் அவிழ்க்கப்படும்.

இந்தாண்டு பொங்கல் திருவிழாவிற்கு காளைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் கொடூரன், மலையழகன், படையப்பா, கத்தி, கருடன், அசுரன், காட்டுராஜா, ராட்சசன், கொம்பன், சுள்ளான், ஆகியோர் தயாராக உள்ளனர். இவர்களோடு தற்போது புது வரவாக வேலன், நரசிம்மன், வௌ்ளையன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 3பேரும் இன்னும் தயாராகவில்லை. அடுத்த ஆண்டு போட்டியிடும். எங்களுடைய காளைகளுக்கு சரியான உணவுகளை, சரியான நேரத்தில் கொடுப்பதற்கு என்று யாராவது ஒருத்தர் இந்த கொட்டகையிலேயே இருப்போம்.

இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கரிக்கா தவுடும், அரிசி குருணையும், சுவைக்கு கோதுமை மாவும், பருத்திகொட்டை, பச்சை புல், உள்ளிட்டவைகள் கொடுக்கிறோம். இவைகளுக்கு நாள் ஒன்றுக்கு உணவிற்கு மட்டும் 10ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. அதேபோல் வாரத்திற்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி, தினமும் ஒருமணி நேரம் மூச்சு பயிற்சி மாடுகளின் மூக்கு கயிறை நன்றாக உயர்த்திகட்டி ஒரு மணி நேரம் வைத்தால், ரத்த ஓட்டம் சீராகி அது தன்னுடைய மூச்சை உணரும், இந்த பயிற்சி கொடுப்பதற்கு முக்கிய காரணம் போட்டிகளுக்கு செல்லும்போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் அந்த சமயங்களில் மாடு சோர்ந்து போகாமல் அதே சுறுசுறுப்புடன் சீறி பாயும். எனவே இதை தினமும் நாங்கள் பழக்கப்படுத்தி வருகிறோம்.

இதில் சில மாடுகள் பல ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது. அதில் அன்பு 128 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது. கொடூரன், படையப்பா, கத்தி இவைகள் இதுவரை போட்டிகளில் பிடிபட்டது இல்லை. எனவே இந்தாண்டு நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் இந்த காளைகளை இடம்பெற செய்வோம். எங்களுடைய நோக்கம் ஜல்லிக்கட்டாக இருந்தாலும், நாட்டு இனம் அழியாமல் அதனை நாளுக்கு நாள் இனப்பெருக்கம் செய்து அழிவில் இருந்து மீட்பது தான். எங்களுக்கு பிறகு எங்கள் வாரிசுகள் இதை தொடருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Tags : Jallikatu ,Trichy , Trichy, Jallikattu, 4 generation
× RELATED மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா...