×

திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது

திருவாரூர் : பொங்கல் விழாவையொட்டி திருவாரூரில் கரும்பு, வாழைத்தார் மற்றும் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை வியாபாரம் நேற்று களை கட்டியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இன்று போகியும், நாளை பொங்கல், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல், அதைத்தொடர்ந்து காணும் பொங்கல் என அடுத்தடுத்த 4 நாட்கள் பொங்கள் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

 இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர். இதுமட்டுமன்றி பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்று வீட்டில் இருந்து வரும் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட இந்த பண்டிகையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய், தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பொங்கல் என்றாலே பச்சரிசி. வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை, ஏலம், நெய் கொண்ட சர்க்கரைப் பொங்கல் மட்டுமின்றி வெண் பொங்கலும் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மற்றும் வாழைப்பழம் முக்கிய இடம்பெறும். மேலும் பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும், மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பண்டிகையினை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 பொங்கல் திருநாள் நாளை (15ந் தேதி) கொண்டாடப்படவுள்ள நிலையில் திருவாரூர் பகுதியில் செங்கரும்பு, வாழைத்தார் மற்றும் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மண் பானை விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டின் விலை ரூ.200 முதல் ரூ.250 வரை இடத்திற்கு தகுந்தார்போல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் இதற்கான ஒதுக்கப்பட்ட வாரசந்தை போன்ற இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது நகர் முழுவதும் மினி லாரிகள் மூலம் வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு என இந்த செங்கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருவதால் எந்த இடத்தில் விலை குறைவாக உள்ளது என பொதுமக்கள் அங்குமிங்கும் தேடி அலைந்து தங்களுக்கு விருப்பப்பட்ட கரும்புகளை வாங்கிச் சென்றனர்.

இதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு முக்கிய பங்கு வகிக்கும் வாழைத்தார் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. சாதாரணமாக பண்டிகை காலங்களில் தங்களது வீடுகளுக்கு அதிகபட்சம் ஒரு சீப்பு அல்லது 2 சீப்பு மட்டுமே வாழைப்பழம் வாங்கும் நிலையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு மட்டும் பெரும்பாலானோர் முழு தாராக வாங்கும் வழக்கம் இருந்து வருவதால் பொதுமக்கள் பலரும் இந்த வாழைத்தார்களை விலை கொடுத்து வாங்கி தங்களது வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

நன்னிலம்: நன்னிலம் பகுதியில் கொரோனாவுக்கு பின் இரண்டாண்டுகள் கழித்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில், கடந்த இரண்டு வருடங்களாக, கொரோனா பாதிப்பினால், முடங்கிய நிலையில், இந்த ஆண்டு,  சமத்துவ பொங்கல் விழா, பல்வேறு இடங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் நிறுவனங்களில், பாரம்பரிய வேட்டி சட்டை, புடவை போன்ற, ஆடைகள் அணிந்து, பள்ளிக்கல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலர்கள், தங்கள் நிறுவனங்களின் சார்பில், பொங்கல் விழா கொண்டாடினார்கள். இதனை அடுத்து, பாரம்பரிய இசையான, பறை இசைத்தல், நாட்டுப்புறப் பாடல் நடனம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் வர்த்தகம் என்பது நலிவடைந்த நிலையில், இந்த ஆண்டுபொங்கல் விற்பனை, நன்னிலம் சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. கரும்பு மற்றும் வாழைத்தார் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. பொங்கல் விழாவிற்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், கடைத்தெருவில், மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. அதேபோல், சீர் வைக்கும், நிகழ்விற்காக மக்கள், வாடகை வாகனங்களில், ஆங்காங்கே சென்று வரும் நிகழ்ச்சியும், காணப்படுகிறது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்பு, கொண்டாடப்படும் பொங்கல் விழா, பொது மக்களிடையே  உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pongal ,Thiruvarur ,Nannilam , Pongl Festival, Thiruvarur, Sugarcane, Banana
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்