பொங்கலன்று நடத்தப்படும் எழுத்து தேர்வை ரத்து செய்யக்கோரி எஸ்பிஐ வங்கி பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்பி உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: பொங்கல் அன்று நடத்தப்படும் எழுத்து தேர்வை ரத்து செய்ய கோரி  நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வட்டார தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் அறையில் சு.வெங்கடேசன் எம்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 355 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு முதல் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட தேர்வு வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

தேர்வு நடக்கும் அன்று பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடத்தினால் தேர்வு எழுத உள்ள தமிழக இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழர் திருநாள் அன்று நடத்தப்படும் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற கோரி மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாரத ஸ்டேட் வங்கிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்திற்கு வங்கி அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் மற்றும் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, வட சென்னை மாவட்டச் செயலாளர் சுந்தரராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக நேற்று வங்கிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வட்டார தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் வட்டார தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தனது அறையில் வெங்கடேசனிடம் பேச்சுவார்தை நடத்தினார். அவரது அறையிலேயே, ‘பொங்கல் அன்று நடத்தப்படும் தேர்வு ரத்து செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று சு.வெங்கடேசன்  கூறி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிருப்பு பேராட்டம் நடத்தும் சு.வெங்கடேசனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: