×

முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது

சென்னை: முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில், திடீர் திருப்பமாக அவரது தம்பியை போலீசார் கைது  செய்துள்ளனர். முன்னாள் எம்பி மஸ்தானின் மகன் ஹரிஷ் (34). இவர் கூடுவாஞ்சேரி காவல்‌ நிலையத்தில்‌ கொடுத்த புகாரில், எனது தந்தை மஸ்தான்‌ கடந்த மாதம் 18ம் தேதி சித்தப்பா கொஷே ஆதம்பாஷாவின்‌ மருமகன்‌ இம்ரான்‌ பாஷாவுடன் காரில்‌ சென்றார். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பில் இறந்து விட்டதா கூறினர். ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, கூடுவாஞ்சேரி உதவி ஆணையாளர்‌ ஜெயராஜ்‌ மற்றும் தனிப்படையினர் நடத்திய விசாரணையில்,  மஸ்தான் தான் கொடுத்த  ரூ.15 லட்சம் கடனை திருப்பி கேட்டதால், சித்தி மகன்‌ தமிம் (எ) சுல்தான்‌ அகமது மற்றும்‌ அவரது நண்பர்கள்‌ சேர்ந்து மஸ்தானை கொலை செய்ததாக இம்ரான் பாஷா ஒப்புக்கொண்டார்‌. இவ்வழக்கில்‌ இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், இம்ரான்‌ பாஷாவின்‌ தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்தபோது, மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும்,‌ பின்னும்‌ மாமனார்‌ கவுசே ஆதாம் பாஷவுடன்‌ அடிக்கடி தொலைபேசியில்‌ பேசியது தெரியவந்தது. இதில்,  மஸ்தானுக்கும்‌ அவரது தம்பி கவுசே ஆதாம் பாஷாவிற்கும்‌ குடும்ப சொத்து தொடர்பாக முன்‌ விரோதம்‌ இருந்தது தெரியவந்தது.  அதனால், கவுசே ஆதாம் பாஷாவிற்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக இம்ரான்பாஷா, தமீம்‌ (எ) சுல்தான்‌ அகமது நஷீர்‌ ஆகியோர்களை காவலில்‌ எடுத்து விசாரித்தனர். இதில் கடன் தொகை ரூ.8 லட்சத்தை திருப்பி கேட்டதாலும், குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனாருக்கு எழுதி கொடுக்க தடையாக இருந்ததாலும்‌, தனது மாமனாருடன்‌ சேர்ந்து மஸ்தானை கொலை செய்ய திட்டம்‌ போட்டு அதன்படி மஸ்தானுடன் நெருங்கி பழகி அவரை வெளியே காரில்‌ அழைத்து சென்று உறவினர்களுடன் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் கவுசே ஆதாம் பாஷாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : Mastan , Former MP Mastan's brother arrested in murder case
× RELATED புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை