×

பொங்கல் வியாபாரம் களைகட்டியது; கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு: நாளை போகி பண்டிகை

நாகர்கோவில்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (15ம்தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை (14ம்தேதி) போகி பண்டிகை ஆகும். குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் பொங்கல் கொண்டாட்டங்களை கட்டி உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி ஆகும். அதன்படி நாளை (14ம்தேதி) போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பழைய பொருட்களை வாங்கி வருகிறார்கள். தீ வைத்து கொளுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் இன்று காலை குவிந்தனர். திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்டபகுதிகளில் இருந்து கரும்புகள் குவிந்துள்ளன. மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகளும் அதிகளவில் வந்துள்ளனர். ஒரு கட்டு கரும்பு ரூ.550 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கோட்டார் கம்பளம் ரோட்டில் உள்ள பாத்திர கடைகளில் புதிய பானைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் (16ம்தேதி) மாட்டு பொங்கல் ஆகும். அதற்கு மறுநாள் காணும் பொங்கல் ஆகும். பொங்கல் பண்டிகையையொட்டி 14,15,16,17ம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் ஆகும். இதனால் சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடலோர பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கிழங்கு வகைகள் வரத்து அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளும் விற்பனைக்காக குவிந்துள்ளன. சிறுகிழங்கு, சேனை கிழங்கு, சேம்பு, கருணை, வள்ளிக்கிழங்கு, பிடிகிழங்கு,காய்ச்சி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளின் வரத்தும் அதிகமாக உள்ளன. சேனை கிலோ ரூ.35 ல் இருந்து விற்பனையாகிறது. சேம்பு ரூ.40,45 என்ற வகையிலும், சிறு கிழங்கு, சீனி கிழங்கு ரூ.45, ரூ.50 என்ற வகையிலும் விற்பனையாகிறது. பனங்கிழங்கு ஒரு கட்டு ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. நாகர்கோவில் உழவர் சந்தையிலும் விற்பனைக்காக கிழங்கு வகைகள், காய்கறிகள் குவிந்துள்ளன.

Tags : Pongal trade ,Bogey festival , Pongal business, police on shopping streets, Boggi festival tomorrow
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...