×

இந்தியாவில் 2-வது ஆதியோகி சிலை பெங்களூரு அருகே ஜனவரி 15-ம் தேதி திறப்பு: துணை குடியரசு தலைவர், முதல்வர் பங்கேற்பு

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:
மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் மாண்புமிகு துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைக்க உள்ளார். கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், சத்குரு சந்நிதியில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்விழாவை சத்குரு செயலி மற்றும் சத்குரு யூடியூப் சேனல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களில் நேரலையில் காணலாம்.

முன்னதாக, ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகிய கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதகுலம் அனைத்திற்கும் ‘ஒரு துளி ஆன்மீகத்தை’ வழங்க உலகம் முழுவதும்  ‘ஆன்மீக கட்டமைப்புகளை’ நிறுவ வேண்டும் என்பது  சத்குருவின் நோக்கம். சத்குரு சந்நிதி என்பது தனி மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சியை, முன்னேற்றத்தை ஊக்குவிக்கிற, பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி மிகுந்த இடமாகும். இது மனம், உடல், உணர்வுகள் மற்றும் ஆற்றலுக்கு தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பண்டைய யோக அறிவியலில் இருந்து நமக்கு வழங்குகிறது. ஒரு மனிதனின் உள்நிலையை மேம்படுத்துவதும், சாதகர்களின் முழு திறனை உணரச்செய்யும் வாய்ப்பை உருவாக்குவதும் இதன் நோக்கம்.

மனித அமைப்பிலுள்ள ஐந்து சக்கரங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆதியோகியின் அருகே யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்கிறார் . யோகேஸ்வர லிங்கத்தின் இருப்பில் ஆதியோகி உயிர்ப்புமிக்க அம்சமாக மாறுவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : 2nd Adiyogi statue ,India ,Bangalore ,Vice President ,Chief Minister ,State , 2nd Adiyogi statue in India, Bengaluru, Vice President, Chief Minister participation
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...