×

பொங்கல் விழா சீட்டு நடத்தி 8 கோடி ரூபாய் மோசடி: 3 பேர் கைது

திருமலை: பொங்கல் விழா என்ற பெயரில் சீட்டு நடத்தி 24 ஆயிரம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் கோண்டகரகம் கிராமத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பலராஜ். இவர் அப்பகுதி மக்களிடம் ‘சங்கராந்தி கானுகா’ (பொங்கல் விழா) என்ற திட்டத்தில் மாதம் ரூ.300 என ஆண்டுக்கு ரூ.3,600 செலுத்தினால் சங்கராந்தி பண்டிகையின்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை 24 விதமான மளிகை பொருட்கள் வழங்குவதாக கூறியுள்ளார்.

இவருடன் ஸ்ரீலேகா, மஜ்ஜி ரமேஷ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்துள்ளனர். இதற்காக விஜயநகரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் 189 முகவர்களை நியமித்துள்ளனர். இவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதால் இந்தாண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.8.9 கோடி வசூலித்துள்ளனர். இந்த பணத்தின் மூலம் மஜ்ஜி அப்பலராஜ்,  விஜயவாடாவில் சுத்திகரிக்கப்பட்ட புதிய தண்ணீர் ஆலையை ரூ.3.5 கோடியில் கட்டியுள்ளார். ஆனால், பணம் கட்டியவர்களுக்கு சங்கராந்தி (பொங்கல்) பண்டிகைக்கான பொருட்கள் வழங்கவில்லை.  இதுகுறித்து கேட்டபோது சரியான தகவல் தெரிவிக்கவில்லையாம்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் குர்லா போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மஜ்ஜி அப்பலராஜ் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15.18 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.44 லட்சத்து 12 ஆயிரத்து 900 ரொக்கம் மற்றும் ரூ.29.95 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர 5 வங்கி கணக்குகளில் ரூ.39 லட்சத்து 6 ஆயிரத்து 326 ரொக்கம் முடக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரில் 16 வாகனங்கள் மற்றும் 2 தண்ணீர் ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pongal festival ticket, 8 crore rupees fraud, 3 people arrested
× RELATED கேரளாவில் பஸ் டிரைவருடன் மோதல்: எம்எல்ஏ, மேயர் மீது போலீஸ் வழக்கு பதிவு