×

பெண்ணாடத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை: பொதுமக்கள் வலியுறுத்தல்

பெண்ணாடம்: பெண்ணாடம் ரயில் நிலையத்தில், பகல் நேரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ரயில் நிலையத்தில், மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் மற்றும் கடலூரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் நின்று செல்கிறது. சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில்களில் பகல் நேர ரயில் குருவாயூர் ரயில் மட்டுமே பெண்ணாடத்தில் நின்று செல்கிறது. இரவு நேர மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கொரோனாவுக்கு முன் நின்று சென்று கொண்டிருந்தது, அதன் பிறகு அண்மை காலமாக நிற்பதில்லை.

இந்த பகுதியில் இரண்டு தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. பெண்ணாடம் அருகில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றுவதில் ஆண்டுக்கு பல கோடி வருமானம் ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைக்கிறது. சிமெண்ட் ஆலைகளில் பணிபுரியும் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேலும் பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் சிமெண்ட் ஆலையில் பணியாற்றி வருகின்றனர். திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம், இறையூர் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பெண்ணாடம் ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.

ஒன்றிய அரசிடம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெண்ணாடம் வழியாக செல்லும் ரயில்களை பெண்ணாடத்தில் நிறுத்த கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ரயில்வே துறை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் பகல் நேர ரயில்களான பல்லவன், வைகை ரயில்களை பெண்ணாடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பெண்ணாடம் ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.

‘கால விரயம் ஏற்படுகிறது’
செந்துறை ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் ஞானமூர்த்தி கூறுகையில், மாணவ, மாணவிகள் பலர் திருச்சி மற்றும் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியலூர் ரயில் நிலையம் அல்லது விருத்தாசலம் ரயில் நிலையம் செல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. மேலும் வியாபாரிகள், பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை செல்ல அருகிலுள்ள பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பகல் நேர ரயில்களான பாண்டியன், வைகை ரயில்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

‘பயணிகள் ரயில் மட்டும் நிற்கிறது’
பெண்ணாடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஆற்றலரசு கூறுகையில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் இயக்கப்பட்டபோது பயணிகள் ரயில் மட்டுமே பெண்ணாடத்தில் நிற்கிறது. திட்டக்குடி, பெண்ணாடம் பகுதியில் இருந்து காசி மற்றும் சீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். விருத்தாசலம் சென்று தான் ரயில் ஏற வேண்டும். பகல் நேரத்தில் சென்னை செல்லும் பாண்டியன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெண்ணாடத்தில் நின்று சென்றால் அலைச்சல் இல்லாமல் சென்று வரலாம். ரயில்வே துறை அதிகாரிகள் பெண்ணாடத்தில் ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : Pennadam , Action for all trains to stop at Pennadam: Public insistence
× RELATED கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!