×

நாளை மறுநாள் கொண்டாட்டம்; குமரியில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்: சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

நாகர்கோவில்:  பொங்கல் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து குமரியில் பொங்கல் வியாபாரம் களை கட்டத்தொடங்கியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி  மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டும். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும். கோயில்களிலும் பக்தர்கள் பெருமளவில் திரள்வார்கள். கோயில்கள், வீடுகளில் பொங்கல் வைத்து  வழிபாடு நடத்துவார்கள். பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை ஆகும். நாளை (14ம்தேதி) போகி பண்டிகையையொட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மக்கள் போகி கொண்டாட்டங்ளை நடத்த வேண்டும். போகி பண்டிகையின்போது மாசு இல்லாத போகி பாண்டிகையாக இருக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்காமல், அதனை சுகாதார பணியாளர்களிடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மதியம் வேளையில் தூய்மை பணியாளர்கள் வீடுவீடாக சென்று போகி பண்டிகைக்கு எரிக்க வைத்திருக்கும் பழைய பொருட்களை சேகரித்து வருகின்றனர். அதனை நுண்ணுரம் தயாரிக்கும் மையங்களில் உரமாக்கவும் முடிவு செய்துள்ளனர்.  

பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம்  காட்டுகிறார்கள். குறிப்பாக  பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் நேற்று குவிந்தனர். திண்டுக்கல், மதுரை, தஞ்சை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் குவிந்துள்ளன. மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்குகள் அதிகளவில் வந்துள்ளன. கோட்டார் கம்பளம் ரோட்டில் உள்ள பாத்திர கடைகளில் புதிய பானைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் (16ம்தேதி) மாட்டு பொங்கல் ஆகும் அதற்கு மறுநாள் காணும் பொங்கல் ஆகும். தொடர்விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் மக்கள் தயார் ஆகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மார்க்கெட்டுக்கு வந்த கிழங்கு வகைகள்
பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளும் விற்பனைக்காக குவிந்துள்ளன.  சிறுகிழங்கு, சேனை கிழங்கு, சேம்பு, கருணை, வள்ளிக்கிழங்கு பிடிகிழங்கு, காய்ச்சில் கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் குலசேகரம், பேச்சிப்பாறை, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அப்டா மார்க்கெட், கனகமூலம் சந்தைக்கு வந்து கொண்டு இருக்கிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப கிழங்கு வகைகளை வாங்கி செல்கின்றனர். சில்லரை விலைக்கு கருணை கிழங்கு ரூ40, சிறுகிழங்கு ரூ60, காச்சில் ரூ60, சேம்பு ரூ80, பிடி கிழங்கு ரூ60, சேனை கிழங்கு ரூ35, சீனி கிழங்கு ரூ30 முதல் ரூ40 வரை விற்பனை செய்யப்படுகிறது. பனங்கிழங்கு ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Kumari , The day after tomorrow is the celebration; Weed Pongal business in Kumari: Crowds throng the markets
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...