வறட்சியில் விளைவித்த மல்லிக்கு விலையில்லை: கவலையில் விவசாயிகள்

சாயல்குடி: முதுகுளத்தூர் பகுதியில் போதிய தண்ணீரின்றி வறட்சியிலும் விளைவிக்கப்பட்ட மல்லிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் மழை காலங்களில் நெல்,மிளகாய், மல்லி, சிறுதானியம் வகை பயிர்கள் பயிரிடுவது வழக்கம். இந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால் மிளகாய் பயிர் விவசாயம் தொடக்க நிலையிலேயே பாதிக்கப்பட்டது. இதனால் மிளகாய்க்கு அடுத்தப்படியாக முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டணம், கீழத்தூவல், மேலத்தூவல், மேலக்காவனூர், கீழகாவனூர், சாம்பக்குளம், உடைகுளம், மகிண்டி, பொசுக்குடிபட்டி, புளியங்குடி, தாழியரேந்தல், மட்டியரேந்தல்,கடம்போடை,பொக்கரனேந்தல், புஷ்பவனம், பொன்னக்கனேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் மல்லி விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது.

குறைந்த தண்ணீர் பாசனத்தில் சாகுபடி வரக்குடியதும், ஓரளவு லாபம் தரக்கூடியதுமான நாட்டு மல்லியை பயிரிட்டனர். போர்வெல் மூலம் கிடைக்கக் கூடிய சவறு தண்ணீரை பாய்ச்சி, மல்லி நன்றாக வளர்ந்தது. இதனால் களையை அகற்றுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. தண்ணீர் வசதியில்லா பகுதிகளில் செடிகளை காப்பாற்ற சில இடங்களில் டேங்கர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி, கூலி ஆட்கள் மூலம் செடி தூர்களில் தெளித்து வந்தனர். இதனால் வறட்சியிலும், ஓரளவிற்கு நல்ல மகசூல் கிடைத்தது.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்து உலர்த்தி, மல்லியை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மல்லி கிலோ ஒன்றிற்கு ரூ.60க்கும் குறைவாக விலை போகிறது. கடந்த கிலோ ஒன்றிற்கு ரூ.80க்கு வாங்கப்பட்ட மல்லி தற்போது, விலை குறைவாக வாங்கப்படுவதால், விவசாயத்திற்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் நஷ்டமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே நாட்டுமல்லிக்கு போதிய விலை நிர்ணயம் செய்து, அரசு கிட்டங்கிகள் மூலம் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மல்லி செடியை உலர்த்தி மல்லியை பிரித்தெடுப்பதற்கு கிராமங்களில் உலர்தளம் இல்லை. இதனால் விவசாயிகள் காலியிடங்களில் காயவைத்து போக்குவரத்து மிகுந்த சாலையில் உலர்த்தும் நிலை உள்ளது. இதனால் மண், குப்பை,தூசு போன்றவையால் மல்லி பாதிக்கப்படுவதால் விலை குறைகிறது. மேலும் விபத்து ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. எனவே கிராமங்களில் மல்லி போன்ற தானியங்களை உலர்த்துவதற்கு உலர்தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: