ஊட்டி நகரில் கேசினோ சந்திப்பு சாலை சீரமைப்பு: மக்கள் நிம்மதி

ஊட்டி:  ஊட்டி நகரில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தி வந்த கேசினோ சந்திப்பு சாலை சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ஊட்டி நகரின் முக்கிய சாலையான கேசினோ சந்திப்பு சாலையில் (வென்லாக் சாலை) பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இது மட்டுமின்றி, இப்பகுதியில் கேசினோ சந்திப்பு சாலை முதல் டிபிஓ சந்திப்பு வரை பல்வேறு இடங்களிலும் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு வந்தன.

இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் இந்த சாலை சந்திப்பு பகுதிகளில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும், பள்ளங்களை தவிர்த்து செல்வதற்காக வாகனங்கள் இயக்கும் போது, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சாலை சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் நேற்று மேற்கொண்டது. கேசினோ சந்திப்பு பகுதியில் இருந்த பெரிய பள்ளங்கள் மூடி தார் சாலை அமைக்கப்பட்டது. அதேபோல, பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த பள்ளங்களை மூடி பேட்ச் ஒர்க் மேற்கொள்ளப்பட்டது. கேசினோ சந்திப்பு முதல் டிபிஓ சந்திப்பு வரை சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

Related Stories: