×

தா.பழூர் அருகே குப்பை மேடாக மாறிவரும் பொன்னாற்று வடிகால் வாய்க்கால்: கோழி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் உள்ளது பழைய பொன்னாற்று வடிகால் பகுதி. இந்த வாய்க்காலில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சோழர் காலத்தில் பாசனத்திற்காகவும் ஏரி குளங்களில் நீர்‌நிரப்புவதற்கும் கொள்ளிடம்‌ ஆற்றின் குருவாடி தலைப்பில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக பொன்னாறு எனும் ஆற்றை ஏற்படுத்தி இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் கிளை வாய்க்கால்கள் அமைத்து பாசனத்திற்கு தண்ணீர் விட்டனர். இதனால் அந்த கிராமங்களில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர்‌நிலைகளிலும் நீரை நிரப்பி பொதுமக்களுக்கு பயன்பட செய்து உபரி நீரானது மீண்டும் அணைக்கரை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டது இந்த பொன்னாறு.

இந்த பொன்னாற்றில் மழைக்காலங்களில் அதிகப்படியான மழைநீர் வெளியேறும் காலகட்டங்களில் பொன்னாற்று வாய்க்காலில் கடைசி பகுதியில் தண்ணீர் வடிவதற்கு வடிகால் பொன்னாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொன்னாறு மூலம் மழை தண்ணீர் கொள்ளிடத்தில் சென்றடைந்து வந்தது.
சோழமாதேவி கிராமத்தில் இருந்து அமிர்தராயங் கோட்டை செல்லும் சாலையின் இடையே உள்ளது வடிகால் பொன்னாறு தரைப்பாலம். இந்த வடிகால் பொன்னாற்றில் வரும் நீரானது இந்த தரைப்பாலத்தில் தேங்கி நின்று அதிகமாகும் பட்சத்தில் தரை பாலத்தை கடந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
அது மட்டுமின்றி சோழமாதேவி விவசாய நிலங்களில் இருந்து வரக்கூடிய மழை நீரும் இந்த வடிகால் பொன்னாறு வழியாக வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது அந்த தரைப்பாலம் அருகே குப்பைகளை கொட்டுவது கொட்டிய குப்பைகளை எரியூட்டுவது உள்ளிட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க கோழி கழிவுகளை கொட்டி துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த கோழி கழிவுகளை பன்றி, நாய், கோழி என அனைத்தும் உண்பது மட்டும் இன்றி சாலையிலும் ஆங்காங்கே காற்றின் மூலம் பறந்து கிடக்கிறது. இந்த கழிவுகளை காக்கை, கொக்கு உள்ளிட்ட பறவைகளும் உண்டு வருகின்றன.
சாலையோரம் கொட்டி கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்பவர்கள் மூக்கை மூடி செல்லும் நிலையும் உள்ளது. இதன் அருகில் வீடுகள் உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் ஆற்றில் அதிக நீர் வரும் நேரத்தில் குப்பைகளை கொட்டி, பட்டுப்போன மரங்கள் உள்ளிட்டவைகளை போட்டு மேடாக்கி இருப்பதால் மழை தண்ணீர் வடிவதில் சிரமம் உள்ளது. இந்த வடிகால் பொன்னாற்றில் கருவேல மரங்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனாலும் தண்ணீர் வடிவத்தில் சிரமம் ஏற்ப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகள் மழை நீரில் கலந்து செல்லும் அபாயம் உள்ளது. இதனால் மற்ற உயிரினங்களும், பொது மக்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் நோய் பரவும் அபாயம் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தண்ணீர் தேங்காமல் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சாலையில் பயணிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palaur , Ponnarut drainage canal turning into a garbage heap near village Bhaur: risk of disease spread due to chicken waste
× RELATED பாலாற்றில் புதிதாக தடுப்பணை ஆந்திர...