நாமக்கல் மாவட்டத்தில் 22,405 ஏக்கரில் சாகுபடி; நெல் மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பள்ளிபாளையம்:  நாமக்கல் மாவட்டத்தில் 22,405 ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. கடந்த டிசம்பர் இறுதி வரை 1040.27 மி.மீ. மழை பெய்துள்ளது. இயல்பு மழையளவை விட 323.73 மி.மீ. அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாய பணிகள், நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் நெல் பயிர் 8,962 எக்டரில் பயிரிடப்பட்டுள்ளது. நெல் சாகுபடியில் கடந்த ஆண்டுகளை விட, பூச்சி நோய் தாக்குதல் இந்த ஆண்டு குறைந்துள்ளதால் ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் கிழக்குகரை கால்வாய் பாசனம் மூலம், சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கருமாக மொத்தம் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடியில் கால்வாய் பாசன விவசாயிகள் மேற்கொள்ளும் பயிர்பாதுகாப்பு மேலாண்மை, விவசாய பணியில் அவர்கள் காட்டும் அக்கரையும் அதிகம். காலை, மாலை நேரங்களில் விவசாயிகள் வயலில் இறங்கி, நீர்பாய்ச்சுவது, களைகளை அகற்றுவது, பூச்சி நோய் தாக்குதலை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த ஆண்டு பள்ளிபாளையம் வட்டாரத்தில் பொன்னி, ஐஆர்- 20, பிபிடி, மாப்பிள்ளை சம்பா, சின்னாறு, கருப்பு கவுனி, தூயமல்லி உள்ளிட்ட ரகங்களையும் நடவு செய்துள்ளனர். உளுந்து, பாசிப்பயிறு போன்றவை ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் வயல்களில் நெல்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் கால்வாய் பாசனப்பகுதியில், நெல் பயிருக்கான பூச்சி நோய் தாக்குதல் குறைந்துள்ளது. இதனால் பூச்சி மருந்தடிக்கும் செலவும் குறைந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. பயிர் விளைச்சலுக்கான மிதமான தட்பவெப்பமும் நிலவுகிறது. இதனால் கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு கூடுதலாக மகசூல் கிடைக்கும்.

தற்போது சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில், அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இதில் ஏக்கருக்கு 100 கிலோ வரை கூடுதல் மகசூல் கிடைத்து வருகிறது.

மார்ச் மாத இறுதியில், கால்வாய் பாசன பகுதியில் நெல் அறுவடை நிறைவடையும். வழக்கமாக ஏக்கருக்கு 2.5 டன் வரை மகசூல் கிடைக்கும். கடந்த ஆண்டு கால்வாய் பாசனப்பகுதியில் சராசரியாக ஏக்கருக்கு 2 மெட்ரிக் டன் வீதம், 20ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பூச்சி நோய்தாக்குதல் குறைந்துள்ளதால், ஏக்கருக்கு 100 கிலோ வீதம் அதிகரித்துள்ளது. அறுவடை முடிவில், கடந்த ஆண்டு பெறப்பட்ட 20ஆயிரம் மெட்ரிக் டன்னைவிட, இந்த ஆண்டு ஆயிரம் முதல் இரண்டாயிரம் மெட்ரிக் டன் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

எள் சாகுபடி: ேமட்டூர் அணையில் போதிய தண்ணீர்  இருக்கும் காலங்களில், நெல் அறுவடைக்கு பிறகும் தண்ணீர் திறக்கப்படுவது  வழக்கம். இந்த தண்ணீரால் கால்வாய் பாசன விவசாயிகளின் கிணறுகளில் நீர் வளம்  மேம்படும். வறட்சியை சமாளிக்க கால்நடைகளுக்கு தேவையான தீவனம்  பயிரிடப்படும். பெரும்பாலான விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்தி எள்  சாகுபடியில் ஈடுபடுவார்கள். 3 மாதங்களில் நான்கு முறை மட்டும் கால்வாயில்  தண்ணீர் திறக்கப்பட்டால் போதும், கால்வாய் பாசன விவசாயிகளின் எண்ணை தேவை  நிறைவடைந்து விடும். இது போலவே, அறுவடைக்கு பிறகு திறக்கப்படும் நீரை  கொண்டு விவசாயிகள் உளுந்து, பாசிப்பயிறு போன்றவற்றையும் பயிடுவது வழக்கம்.

நெல்  அறுவடைக்கு பிறகு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால், எள் மற்றும்  பயறு சாகுபடியில் ஈடுபடும் திட்டத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால்  வேளாண்மை அலுவலகத்தில் இருப்பில் உள்ள 500 கிலோ எள்விதைகளில் 350 கிலோ  விதைகளை விவசாயிகள் வாங்கி வைத்துள்ளனர். இது போலவே வேளாண்மை அலுவலகத்தில்  உள்ள வம்பன்-9 ரக உளுந்து விதைகளும், பாசிப்பயிறு விதைகளும் வேகமாக  விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு பள்ளிபாளையம் வட்டாரத்தில் பொன்னி, ஐஆர்- 20, பிபிடி, மாப்பிள்ளை சம்பா, சின்னாறு, கருப்பு கவுனி, தூயமல்லி உள்ளிட்ட ரகங்களையும் நடவு செய்துள்ளனர். உளுந்து, பாசிப்பயிறு போன்றவை ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் வயல்களில் நெல்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்துள்ளது.

கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

பள்ளிபாளையம் கால்வாய் பாசன பகுதியில், அறுவடை செய்து வரும் நெல் ரகங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நெல் மூட்டைகளை, தமிழ்நாடு வாணிபகழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இதற்காக எலந்தகுட்டை பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். அரசு கொள்முதல் நிலையம் அமைப்பதால், விவசாயிகளின் நெல்லுக்கு அரசு உத்தரவாதம் வழங்கிய விலை கிடைக்கும். அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: