நீடாமங்கலம் ரயில்வே தளத்தில் குடிமகன்கள் அட்டகாசம் நீடிப்பு: பயணிகள் அச்சம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ரயில்வே தளம் இரவு நேர பாராக மாரி வருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே நிலையத்தில் 3 பிளாட் பாரம் உள்ளது. இங்கு திருச்சி, காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, சென்னை, கோவை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்த பிளாட் பாரங்களில் 3 வது பிளாட் பாரம் தண்டவாளம் அருகில் அகலமான நீண்ட சிமெண்ட் தளம் உள்ளது. இந்த தளத்திலிருந்துதான் ரயில் வேகன்களில் (பெட்டி) நெல் மற்றும் அரிசி ஏற்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் இந்த தளத்தை நீடாமங்கலம் மக்கள் பயன்படுத்தி நடைப் பயிற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தளம் அருகில் உள்ள 3வது பிளாட் பாரம் தண்டவாளத்தில் தினந்தோறும் காலை 6.30 மணியளவில் கோவையிலிருந்து மன்னார்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில் வந்து நிற்கும். அப்போது பயணிகள் சிலர் சிமெண்ட் தளம் வழியாக இறங்கி நடந்து வந்து ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு நேரங்களில் சிமெண்ட் தளத்தை சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி மது அருந்தி விட்டு பாட்டில்களை எடுக்காமல் அப்படியே வேத்து செல்கின்றனர்.

சிலர் மது பாட்டில்களை உடைத்து செல்கின்ரனர். இதனால் ரயில் பயணிகளும், நடை பயிற்சியில் ஈடு படுபவர்களும் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் தலையிட்டு ரயில்வே தளத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: