பாலக்கோடு பேரூராட்சிக்கு ரூ4.65 கோடியில் புதிய குடிநீர் திட்டம்: 24 மணி நேரமும் விநியோகம் செய்ய நடவடிக்கை

தர்மபுரி: பாலக்கோடு பேரூராட்சி மக்களுக்கு ரூ4.65 கோடியில் புதிய குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், பாலக்கோடு மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக தளி, பெட்டமுகிலாளம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, சின்னாறு அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தான், தர்மபுரி நகரத்திற்கு குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தர்மபுரி நகராட்சிக்கு தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீர் சின்னாற்றில் இருந்து எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், பாலக்கோடு பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கும் குடிநீர் எடுத்து மக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பாலக்கோடு பேரூராட்சியில், தினசரி 20 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் ரீதியாக வெளியூரில் இருந்து வருவோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் ₹4.65 கோடி மதிப்பீட்டில் 60 அடி ஆழத்தில், 4 புதிய கிணறுகள் தோண்டி, அதன் மூலம் பாலக்கோடு பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுத்துள்ளது. இதற்கான குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா விரைவில் நடக்க உள்ளது. இதுகுறித்து பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பிகே.முரளி மற்றும் அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு பேரூராட்சி வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. பாலக்கோடு பேரூராட்சியில் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். தக்காளி மார்க்கெட், சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில் ரீதியாக, வெளியூரில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் மூலம், முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அம்ருத் திட்டத்தின் கீழ் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து (4 புதிய கிணறுகள் தோண்டி) ₹4.65 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலக்கோடு பேரூராட்சி மக்களுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும். தமிழகத்திலேயே 24 மணிநேரம் குடிநீர் கிடைக்கும் பேரூராட்சியாக பாலக்கோடு திகழும். வேளாண்மை துறை அமைச்சர் விரைவில் இந்த குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: