×

கொள்ளிடம் பகுதியில் பொங்கல் மண் பானை, அடுப்பு விற்பனை ஜோர்

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் பொங்கல் மண்பானை, அடுப்பு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், திருமயிலாடி, மாதிரவேளூர், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மண் பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அருமை கருதி வாங்கி பயன்படுத்துபவர்கள் வருடம் தோறும் மண்பாண்டங்கள் செய்யப்படும் இடங்களுக்கே நேரில் சென்று வாங்கி வந்து பயன்படுத்தி வருகின்றனர். இன்னிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டம் உற்பத்தி செய்பவர்கள் அதனை கொள்ளிடம் மற்றும் புதுப்பட்டினம் புத்தூர் ஆகிய கடைவீதிகளுக்கு எடுத்து வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிராம பகுதிகளில் இருந்து இங்கு வரும் விவசாய குடும்பத்தினர் மண்பாண்டங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். பானைகள், சட்டிகள், கலயங்கள், அடுப்புகள் உள்ளிட்ட பல வகையான மண்பாண்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இது குறித்து மண்பாண்டம் விற்பனை செய்பவர்கள் கூறுகையில், சாதாரணமாக அவ்வப்போது குறைந்த எண்ணிக்கையில் மண்பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த வருடங்களில் மண்பாண்டங்களை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பாக பிரத்தியேகமாக கடந்த ஆறு மாத காலங்களில் மண் சேகரித்து அதனை பக்குவப்படுத்தி பல வகையான மண்பாண்டங்கள் தயாரித்து சூளையில் சுட்டு அதனை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளோம். சாதாரணமாக பானை விலை அளவுக்கேற்றவாறு ரூ.50, 80 மற்றும் ரூ.100 ஆகிய தொகைக்கு விற்பனை செய்து வருகிறோம். பானையின் அளவு மற்றும் சட்டியின் அளவு பெரியதாக இருந்தால் அதற்கான சற்று விலையேற்றம் செய்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாவதால் எங்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை.

ஆனால் வருடம் தோறும் பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருவது மூதாதையர்கள் காலம் தொட்டே தொடர்ந்து நடைபெற்று வருவதால் நாங்களும் அதனை தொடர்ந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதன் சுகாதாரம் மருத்துவ குணங்கள் அறிந்து அனைவரும் மண்பாண்டங்களை பயன்படுத்தி நோயிலிருந்து விடுபட்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றனர்

Tags : Kollidam , Pongal earthen pots and ovens are sold in Kollidam area
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி