×

அஞ்சல் துறை, ரயில்வே இணைந்து புதிய பார்சல் சேவை

சென்னை: இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய ரயில்வே துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய ரயில்வே துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 35 கிலோவுக்கு அதிகம் எடை கொண்ட சரக்குகள் அனுப்பப்படும். இந்திய அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளரின் இடங்களுக்கே நேரடியாக சென்று சரக்குகளை பெற்று ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.  அதேபோல, எந்த இடத்துக்கு சரக்குகள் சென்றடைய வேண்டுமோ அந்த இடத்திற்கே ரயில் நிலையங்களிலிருந்து அஞ்சல் துறை சார்பில் கொண்டு சேர்க்கப்படும்.
சரக்குகள் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்படும்.

மேலும், இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சரக்குகளை கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும். இந்திய அஞ்சல் துறை ஒற்றை தொடர்பு புள்ளியாக செயல்பட்டு சரக்குகளை பெற்று கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யும். மிக குறைந்த விலையில் இந்த சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த சேவையின் முன்னோட்டமாக சூரத் முதல் வாரணாசி வரை பார்சல் அனுப்பப்பட்டது. சென்னை மண்டலத்தில் கடந்த டிச.7ம் தேதி ராணிப்பேட்டை முதல் அரியலூர் வரை பார்சல் அனுப்பப்பட்டது. ராணிப்பேட்டையில் வாடிக்கையாளரின் இடத்தில் இருந்தே சரக்குகள் பெறப்பட்டு திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டு அங்கிருந்து  அரியலூரில் சரியான இடத்தில் டிச.8ம் தேதி சேர்க்கப்பட்டது.

இந்த சேவையை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பங்குதாரர்கள், வணிக நிறுவனங்கள், வர்த்தக சபைகள், தொழில்துறை சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பின் 100 கிலோ முதல் 1 டன் வரை உள்ள சரக்குகளை அனுப்பும் தேவை உள்ளதாகவும், இந்த சேவையை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் சென்னை பிராந்திய வணிக வளர்ச்சி துணை இயக்குநரை 044-28594761, 044-28594762, 9444975512 ஆகிய எண்களில் அல்லது bd.chennaicity@indiapost.gov.in. என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Department of Posts , New Parcel Service in collaboration with Department of Posts, Railways
× RELATED ரூ. 10 லட்சம் மதிப்பில் அஞ்சலக காப்பீடு