மதுரை ரயிலுக்கு குண்டு மிரட்டல்: மேலூரை சேர்ந்தவர் கைது

மதுரை: மதுரை ரயில்வே காவல்நிலையத்திற்கு கடந்த 9ம் தேதி இரவு 7.30 மணியளவில், மாநில காவல் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் வந்தது. அதில், ‘கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது’ என ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே இதே நபர், மதுரை மாநகர் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கும் போன் செய்து, ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர்  போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். இதையடுத்து மர்ம நபர் கூறிய ரயில் மதுரை வந்ததும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப்பதிவு செய்து, மேலூர் அருகே வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த போஸ் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: