கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை: மீண்டும் சென்னை அழைத்து வரப்பட்டனர்

கோவை: கோவை கார் வெடிப்பில் கைதானவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காவலில் எடுக்கப்பட்ட 6 பேரும் மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நடந்த கார்  வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவ்பிக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 6 பேரிடமும் கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் தொடர் விசாரணை நடந்தது. கடந்த 11ம் தேதி இரவு சனாபர் அலி, முகமது ரியாஷ், முகமது நவாஸ், முகமது தவ்பிக் ஆகிய 4 பேரை உக்கடம் எச்.எம்.பி.ஆர் வீதியில் உள்ள ஜமேஷா முபின் வீட்டிற்கும், சனாபர் அலி வீட்டிற்கும் அழைத்து சென்று விசாரித்தனர்.

நேற்று முன் தினம் சனாபர் அலி, சேக் இதயத்துல்லா ஆகியோரை சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மற்றும் ஆசனூர் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கே ஜமேஷா முபின், உமர் பாரூக் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வீடியோ பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் 2 பேரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் விசாரணையில் இருந்த 6 பேரும் சென்னை பூந்தமல்லியில்  உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களிடம் வரும் 17ம் தேதி வரை விசாரணை நடத்தப்பட உள்ளது.

Related Stories: