×

அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், குட்காவும் தலைவிரித்தாடியது போதை பொருட்களை வேரோடு ஒழிப்பது தான் திமுக ஆட்சியின் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: போதைப் பொருள் நடமாட்டம் முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததால் குறைந்திருந்தது. ஆனால் தற்போது 2,136  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் தான் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.  வேதாரண்யம் அருகே ரூ.360 கோடி மதிப்பிலான கோகைன் என்ற விலை உயர்ந்த போதை பொருள் பிடிபட்டதாக செய்திகள் வந்தன. அதன் உண்மை நிலை என்ன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை இந்த ஆட்சி புதிய வரலாற்றை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் 21ம்தேதி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. மார்ச் 2022ல், ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட்டது. 10.08.2022ல் முதன் முதலில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் கூட்டத்தை நடத்தினோம். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக 50,875 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். 11 லட்சத்து 59 ஆயிரத்து 906 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 17,250 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி 3ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜாமீன் வழங்குவதில் கடுமையான எதிர்ப்பு, வங்கி கணக்குகள் முடக்கம், சொத்துகள் முடக்கம், உறுதிமொழி பத்திரம் பெறுவது ஆகியவை திமுக ஆட்சியில் தான் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடத்தப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் குட்கா மாமூல் பெற்று போதைப் பொருள் விற்பனை புற்றுநோய் போல் அதிகரித்தது. அப்போது அமைச்சராக இருந்தவர், டிஜிபி, காவல் ஆணையர் பெயரில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு, அதிமுக ஆட்சியில் கஞ்சாவும் குட்காவும் தலைவிரித்தாடியது.  அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட போதைப்பொருள் இப்போது கஞ்சா வேட்டை, ஆய்வு கூட்டம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி வருகிறோம். எனவே போதை பொருட்ளை பொறுத்தவரை அதை வேரோடு வேரடி மண்ணோடு ஒழிப்பது தான் இந்த ஆட்சியின் லட்சியம்.

எடப்பாடி பழனிச்சாமி: ராமநாதபுரத்தில் அத்தனை சோதனை சாவடிகளை கடந்து கொண்டு செல்லப்பட்ட போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்காமல் எவ்வளவு என்று தெரியவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: குட்கா வழக்கில் யார் சிக்கினார். அது ஒன்று போதாதா? உங்கள் நடவடிக்கைக்கும், எங்கள் நடவடிக்கைக்கும் உள்ள வேறுபாடு.

Tags : Dizhagam ,G.K. Stalin ,Edapadi Palanisamy Karasara , Ganja and Gutka rampant in AIADMK regime DMK regime's goal is to root out drugs: Chief Minister M.K.Stalin, Edappadi Palaniswami debate
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும்...