×

ஆப்கானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை: தொடரும் தலிபான்களின் அதிரடி உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பெண்கள் மேன்மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது, ‘பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என்று அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் அதற்கு எதிர்மறையாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் நசுக்கப்பட்டு வருகின்றனர்.

தலிபான்களின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது. இருந்தாலும் அவற்றை ஒரு பொருட்டாக தலிபான்கள் நினைப்பதில்லை. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது விவகாரங்கள் மற்றும் தலிபான் புகார்களை கேட்கும் இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், ‘பெண்கள் இனி ஆண் டாக்டர்களை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இதனை கண்காணிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மேன்மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags : Afghan , Ban on women seeking treatment from male doctors in Afghanistan: The Taliban's order of action continues
× RELATED தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில்...