ஊட்டியில் 3வது நாளாக உறைபனி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் உறைபனி பெய்ய துவங்கும். குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒரே பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் புல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் ஐஸ் கட்டிகள் போன்று புல்வெளிகள் மற்றும் காய்கறி தோட்டங்களில் உறை பனி காணப்படும். ஆனால், இம்முறை டிசம்பர் மாதத்தில் சில நாட்கள் மழை பெய்த நிலையில் உறை பனி தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்த நிலையில் உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பனி கொட்டி வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

அதேபோல் அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இங்குள்ள புல் மைதானங்கள் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. ஊட்டியில் குதிரை பந்தய மைதானம், ரயில் நிலையம், தாவரவியல் பூங்காவில் இன்றும் உறைப்பனி கொட்டி கிடந்தது. தொடர்ந்து 3 நாட்களாக உறைப்பனி விழும் நிலையில் ஊட்டியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மலைகாய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இன்று காலை அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது.

Related Stories: