கர்ப்பமாக இருப்பதால் ஆஸி. ஓபனில் இருந்து விலகிய நவோமி ஒசாகா

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற 26 வயதான ஒசாகா, 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் வரும் திங்கட்கிழமை மெர்போர்னில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்டஸ்லாம் தொடரில் இருந்து விலகுவதாக அண்மையில் ஒசாகா அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2023 எனக்கு படிப்பினைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும், 2024ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இருப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் நான் எதிர்நோக்குவதற்கு நிறைய இருக்கிறது என்பதை நான் அறிவேன், நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என் குழந்தை எனது ஆட்டங்களில் ஒன்றைப் பார்த்துவிட்டு, `அது என் அம்மா’ ஹாஹா என்று யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதே என பதிவிட்டுள்ளார். மேலும் வயிற்றில் குழந்தை இருக்கும் ஸ்கேன் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஒசாகா அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் கோர்டே அமரி (25) என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் தற்போது தாயாக இருப்பதாக ஒசாகா தெரிவித்துள்ளார்.

Related Stories: