×

தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாரான சம்பா, தாளடி பயிர்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

வல்லம் : தஞ்சாவூர் அருகே ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதியில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நன்கு விளைந்து பால்பிடிக்கும் தருணத்தில் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் நெல் அறுவடை முடிந்த பின்னர் கடலை, எள், பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வர்.

ஆனாலும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சம்பா மற்றும் சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர். இதில் ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டனர்.

இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேரடி நெல் விதைப்பு, நாற்று நடுதல், இயந்திரம் வாயிலாக நடவுப்பணி என்று விவசாயிகள் சாகுபடி மேற்கொண்ட நிலையில் கடந்த மாதத்தில் பெய்த மழை, கடும் பனி போன்றவற்றை தாண்டி தற்போது சம்பா, தாளடி பயிர்கள் நன்கு விளைந்து பால்பிடிக்கும் தருணத்தில் உள்ளது.

பல இயற்கை இடர்பாடுகளை தாண்டி தங்கள் விளைவித்த நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து இருப்பதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அதிக பனியாக இருப்பதால் வயல்களில் களை மண்டி விடக்கூடாது என்பதால் விவசாய தொழிலாளர்கள் வயல்களில் களை பறிக்கும் பணியிலும் மும்முரம் காட்டினர்.
பயிர்களுக்கு இடையில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.ஒரு சில பகுதிகளில் தேவையான இடங்களில் மட்டும் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. நடப்பாண்டு சம்பா, தாளடி சாகுபடி 1.35 ஆயிரம் எக்டேர் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Alakudi ,Thanjavur , Vallam: Chamba and thaladi crops grow well and yield milk in Alakudi, Vidhirayanpet, Chitrakudi near Thanjavur.
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...