உலக கோப்பை ஹாக்கி நாளை தொடக்கம்: கட்டாக்கில் கோலாகல தொடக்க விழா.! இந்தியா முதல் போட்டியில் ஸ்பெயினுடன் மோதல்

கட்டாக் : உலக கோப்பை ஹாக்கி தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு புவனேஸ்வரில் நடந்த தொடரில் பெல்ஜியம் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 15வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக ரூர்கேலா என்ற நகரத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை ஒடிசா அரசு கட்டி இருக்கிறது. இதில் மொத்தம் 20 போட்டிகளும், கலிங்காவில் உள்ள மைதானத்தில் 24 போட்டிகள் நடைபெறும். வரும் 29ம் தேதி இறுதி போட்டி புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்குச் செல்லும்.

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணி மீண்டும் ஒருமுறை மோதி, அதில் வெல்லும் அணி காலிறுதியில் எஞ்சியுள்ள இடத்தை பிடிக்கும். உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள இந்திய அணி டி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்ரிக்கா, பி பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், சி பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. உலக கோப்பை ஹாக்கியில் இந்திய அணி 1971ல் வெண்கலம், 1973ம் ஆண்டு வெள்ளி வென்றுள்ளது.

கடைசியாக 1975ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு 48 ஆண்டுகள் எந்த ஒரு பட்டத்தையும் வெல்லவில்லை. 1978ல் 6வது இடம், 82ல் 5, 86ல் 12, 90ம் ஆண்டில் 10, 94ல் 5,98ல் 9, 2002ல்10, 2006ல் 11, 2010ல் 8, 2014ல் 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தமுறை சொந்த மண்ணில் 6வது இடத்துடன் வெளியேறி உள்ளது. தொடர்ந்து 2வது முறையாக சொந்த மண்ணில் களமிறங்கும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த முறை சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை மதியம் 1 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் அர்ஜென்டினா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. தொடர்ந்து 3 மணிக்கு இதே பிரிவில் ஆஸ்திரேலியா -பிரான்ஸ் விளையாட உள்ளன. மாலை 5 மணிக்கு டி பிரிவில் இங்கிலாந்து -வேல்ஸ் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் நாளை இரவு  7 மணிக்கு ஸ்பெயினுடன் மோதுகிறது. 15ம்தேதி  இங்கிலாந்தையும், 19ம் வேல்ஸ் அணியையும் எதி்ர்கொள்கிறது.

இந்த நிலையில் ஒடிசாவில் கட்டாக் நகரில் நேற்று கோலாகல தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான நடனங்கள் மற்றும் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை திஷாபதானி ஆகியோர் பங்குபெற்ற கலை நிகழ்ச்சியும் நடந்தது. பிரபல பாலிவுட் பாடகர் பிரத்தாம், ஹாக்கி உலகக் கோப்பைக்காக ஹாக்கி ஹே தில் மேரா என்ற பாடலை 11 பாடகர்கள் இணைந்து இணைந்து பாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் பல்வேறு பிரபல பாலிவுட் பாடல்கள் இந்த கலை நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டன. இந்தத் தொடக்க விழாவை சுமார் 40ஆயிரம் பேர் கண்டு களித்தனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

Related Stories: