×

பாடம் எடுக்காமல் அலைக்கழிக்கும் ஆசிரியர்களை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்-மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே சரிவர பாடம் எடுக்காமல் அலைக்கழிக்கும் ஆசிரியர்களை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மூலைகேட் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மூலைகேட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 205 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், 7 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியல் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரிவர பாடம் எடுப்பதில்லையாம். இதை தட்டிக்கேட்டும் மாணவர்களை மேஜை விட்டு கீழே உட்கார வைக்கப்பட்டு வகுப்புகளை நடத்தி வருகிறார்களாம். ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரத்திற்கும் வருவதில்லையாம். இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களும் பள்ளி மேலாண்மை கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் என பல கூட்டங்களில் பலமுறை தெரிவித்தும் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இல்லையாம். மேலும் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்தும் புகார் அளித்துள்ளனர். அளித்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். விரைவில் 10 வகுப்பு பொதுதேர்வுகள் வரவுள்ள நிலையில் பாடங்கள் நடத்தப்படாததால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எப்படி படிப்பது என்று பெரும் அச்சமடைந்துள்ளனர்.  

எனவே  சம்மந்தபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று அரசு பள்ளி எதிரே மூலைகேட்- அணைக்கட்டு செல்லும் சாலையில் பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து பள்ளிக்குள் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் பள்ளி மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் சரி வர பாடம் எடுப்பதில்லை, கேட்டால் எங்களை திட்டுகிறார்கள், தேர்வு தாள்களில் கேள்விகளை மட்டும் எழுத வைத்து விட்டு விடைகளை ஆசிரியைகளே எழுதி திருத்தி அவர்களே மதிப்பெண்களை வழங்குகின்றனர் என சரமாரியாக ஆசிரியர்கள் மீது புகார்களை கொட்டி தீர்த்தனர்.

இதையடுத்து பிரச்னை அதிகமாகவே அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர்களை சமரசப்படுத்தி தனியாக ஒரு அறையில் அமர வைத்து அவர்கள் தரப்பில் விசாரணை நடத்தினர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மாணவி, மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியோது, எங்கள் பிள்ளைகள் தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் செய்த பிரச்சனைகளை தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடால் மாணவர்களை பழி வாங்குகின்றனர். பள்ளியில் படம் நடத்துவதில்லை என கூறி செல்போன்களில் யூடியுப் மூலம் நடத்தும் பாடங்களை இரவில் வீட்டில் படிக்கின்றனர் என அவர்களும் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடாமல் இருக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதை தொடர்ந்து மாணவிகள், அவர்கள் பெற்றோர் வைத்த புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் தனித்தனியாக பெற்றோர், மாணவிகள் முன்னிலையில் விசாரணை நடத்தினர். இதில் நடத்திய விசாரணையில் இருதரப்பிலுமே ஆசிரியர்கள் மீதே குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். அவர்கள் சமரசம் செய்து, சம்மந்தபட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி சஸ்பெண்ட் நடவடிக்கை மற்றும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி எச்சரித்துவிட்டு சென்றனர். சரிவர பாடம் எடுக்காமல் அலைகழிக்கும் ஆசிரியர்களை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு 3 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : District Education Officer , Dam: There was a commotion when government school students staged a road blockade to condemn the teachers who were loitering around the dam near the dam.
× RELATED மேமணப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா