நீலகிரி மாவட்டத்தில் குட்கா, புகையிலை போதை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்-எஸ்பி கடும் எச்சரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை  பொருட்கள்விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைத்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சோதனை சாவடிகளிலும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா, போதை பாக்கு, பான்பாரக், பான்மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக இவை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து நீலகிரிக்கு காய்கறி லாரிகள், சுற்றுலா வாகனங்களில் கடத்தி வரப்படுகின்றன. இதுதவிர அரசு பஸ்கள் மூலமாகவும் கடத்தி வரப்படுகிறது.

கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை ஏற்றும்  புகையிலை பாக்கெட்டுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்டி கடைகளில் மிட்டாய், பிஸ்கெட் போன்றவைகள் விற்பதால் கிடைக்கும் வருவாயை காட்டிலும், போதை பொருட்கள் விற்பதால் அதிக வருவாய் கிடைப்பதால் சட்டவிரோத விற்பனை தொடர்கிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர், புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்பவர்களிடம் உரிய அறிவுரைகளை வழங்கி விற்பனையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதையடுத்து காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி பிரபாகர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர், போதையில்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டதையும் போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தடையை மீறி குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. இனிமேல் வியாபாரிகள் அவற்றை வாங்கி விற்க கூடாது.

காவல்துறை நடவடிக்கை எடுத்த போதும் சிலர் தொடர்ச்சியாக விற்பனை செய்கின்றனர். முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அழைத்து பேசி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளனர். சட்ட விரோதமாக தொடர்ச்சியாக விற்பனை செய்பவர்கள் யாராவது இருந்தாலும் அவர்கள் குறித்து தகவல் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர், உணவு பாதுகாப்புத்துறையினருடன் இணைந்து புகையிலை, போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து முதல் முறை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் காய்கறி லாரிகள் மூலமாக போதை பொருட்கள் வருவதாக புகார் உள்ளது.

இதனை லாரி உரிமையாளர்களும் முறையாக கண்காணிக்க வேண்டும். சோதனை சாவடிகளிலும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ், ஊட்டி டவுன் டிஎஸ்பி மகேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: